குப்பை கொட்டும் இடமாக பஞ்., கிணறு
குப்பை கொட்டும் இடமாக பஞ்., கிணறு
குப்பை கொட்டும் இடமாக பஞ்., கிணறு
ADDED : ஜூன் 10, 2024 01:37 AM
தர்மபுரி,: தர்மபுரி மாவட்டம், கொண்டம்பட்டி பஞ்., உட்பட்ட புளியம்பட்டியில் பஞ்., நிர்வாகத்திற்கு சொந்தமான பொதுக்கிணறு, 40 ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் ஆதாரமாக இருந்தது. சிறிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்கக்தொட்டி மற்றும் மினி சின்டெக்ஸ் டேங்க் வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்தது. கடும் வறட்சியால் வறண்ட கிணற்றை பஞ்., நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால், சிலர் குப்பை கொட்டும் இடமாக பொது கிணற்றை மாற்றி விட்டனர். குடிநீர் ஆதாரத்தை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, கொண்டம்பட்டி பஞ்., செயலாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''அது தனி நபர் இடத்தில் உள்ளதால், கிணற்றை இடித்து விட்டு, மூடும் பணிகளை செய்து வருகிறோம். எனவே பராமரிப்பு பணிகளை செய்யவில்லை.'' என்றார்.
அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜா கூறுகையில், ''என்னுடைய தந்தை, 40 ஆண்டுக்கு முன் பஞ்., தலைவராக இருந்தபோது, கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அந்த இடத்தை தானமாக வழங்கி, கிணறு வெட்டப்பட்டது. தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், பஞ்., நிர்வாகத்தின் மெத்தனத்தால் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணற்றை பராமரிக்காமல் விட்டு விட்டனர். கிணற்றை சீரமைத்து, மீண்டும் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்'' என்றார்.