வற்றாத தீர்த்தம் கொண்ட தீர்த்தமலை
வற்றாத தீர்த்தம் கொண்ட தீர்த்தமலை
வற்றாத தீர்த்தம் கொண்ட தீர்த்தமலை
ADDED : மார் 18, 2025 01:57 AM
வற்றாத தீர்த்தம் கொண்ட தீர்த்தமலை
அரூர் அடுத்த தீர்த்தமலையில், அற்புத மூலிகைகளின் சத்து கலந்து வற்றாத தீர்த்தத்தில் நீராட, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புராண வரலாறுதர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, திருவண்ணாமலை செல்லும் சாலையில், 15வது கி.மீ.,ல் தீர்த்தமலை மலை மீது, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து, ஒரு கி.மீ., துாரம் செங்குத்தாக படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த உலகில் அவதாரம் செய்த ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில், முதல்கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்து விட்டு, 2ம் கால பூஜைக்காக, தீர்த்திகிரி மலை மீது, அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி, அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜையை முடித்தார் என்பது இறை நம்பிக்கை. அந்த தீர்த்தமே ராமர் தீர்த்தம் என்கிற புண்ணிய தீர்த்தமாகும். ஸ்ரீராமர், பார்வதிதேவி, குமரகடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம் செய்து, பாவ விமோச்சனம் பெற்ற தலம்
இத்திருத்தலம்.
புனித தீர்த்தங்கள்
தர்மபுரி மாவட்டத்தில், அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலம். இங்குள்ள ராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை சிறப்பு வாய்ந்தது. மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது.
பக்தர்கள் முதலில் அனுமன் தீர்த்தத்திலும், பின்னர் ராமர் தீர்த்தத்திலும் நீராடுகிறார்கள். ராமர் தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து, எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும். கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை என்பது இதன் சிறப்பு.
பக்தர்கள் வேண்டுதல்
இப்படி, தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும், புதுவாழ்வும் பெறுகின்றனர். காலை, 6:30 மணி முதல், மாலை, 5:00 வரை கோவில் திறந்திருக்கும். ஈசனை வழிபடுவோருக்கு மனநிம்மதி, உடல் சம்மந்தப்பட்ட நோய்கள் தீர்கிறது.
கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், வீடு கட்டவும், திருமண தடை நீங்க, குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் மாசிமகத் திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு, பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கல்வெட்டு தகவல்
தீர்த்தமலை காசிக்கு
ஒப்பானது. ராமேஸ்வரத்துக்கு இணையானது. எனவே, இதை தென்னகத்தின் காசி, வட தமிழகத்தின் ராமேஸ்வரம் என அழைக்கலாம் என சிவனடியார்கள் கூறுகின்றனர். இத்
திருக்கோவில் கி.பி., 7ம் நுாற்றாண்டில் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் பங்களிப்போடு கட்டப்பட்டது. இக்கோவிலில் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்களுடன் தொடர்புடைய பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ பேரரசர்கள் இத்தலத்திற்கு தவறாமல் வந்து
சென்றதாகவும், கி.பி., 1041ல் ராஜராஜ குலோத்துங்க சோழனால் இக்கோவிலில் திருப்பணி நடந்ததாகவும்
கல்வெட்டுகள் கூறுகின்றன.