Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திண்டிவனம் - கடலுார் ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெறுமா? ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

திண்டிவனம் - கடலுார் ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெறுமா? ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

திண்டிவனம் - கடலுார் ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெறுமா? ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

திண்டிவனம் - கடலுார் ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெறுமா? ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

ADDED : அக் 20, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
- நமது நிருபர் -

திண்டிவனம் - கடலுார் ரயில்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி - கடலுார் இடையிலான பாதைக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என, ரயில்வே அமைச்சகத்தை, புதுச்சேரி அரசு வலியுறுத்தி உள்ளது.

திண்டிவனம் - கடலுார் இடையே, புதுச்சேரி வழியாக 77 கி.மீட்டருக்கு புதிய ரயில்பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. குறைவான போக்குவரத்து மதிப்பீடு காரணமாக இத்திட்டம் இன்னும் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படவில்லை என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது, திண்டிவனம் ரயில்வே திட்டத்தை எதிர்பார்த்திருக்கும் புதுச்சேரி மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

திண்டிவனம் - கடலுார் ரயில்வே திட்டம் என்பது, திருப்பதி நகரியில் இருந்து திண்டிவனம் வரை ரயில்வே இணைப்பு கொடுத்து, அதன் பிறகு புதுச்சேரி சேதராப்பட்டு வரை ரயில்வே திட்டத்தை நீட்டித்து, மூன்றாம் கட்டமாக 21 கி.மீ., தொலைவிற்கு புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டம் செயல்படுத்தலாம் என்பதே மத்திய ரயில்வே அமைச்சகத்தின் திட்டமாக உள்ளது. இதற்கான சர்வே பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தில் முக்கிய மாற்றத்தை செய்து, புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என, சர்வேயின்போது மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.

திட்டம் எப்போது துவங்கும் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுாருக்கு ரயில் இயக்க ஏற்கனவே இதேபோல் ஒரு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப் பட்டது.

திண்டிவனம் - புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டத்தை செயல்படுத்த, 77 கி.மீ., துாரத்திற்கு சர்வே எடுக்கப்பட்டது.

பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்கள் வழியாகவும், விளை நிலங்கள் பாதிக்காத வகையிலும் ரயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்த இரு மாநில அரசுகளு ம் நடவடிக்கை எடுக்காததால், சர்வே நடத்தியதோடு, இந்த ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருந்தால், புதுச்சேரி, திண்டிவனம், கடலூர் நகரங்களின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் இப்போ து அதே பாணியில் மீண்டும் சர்வே பணியை துவங்கியிருப்பது, சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எப்போது இந்த சர்வேயை முடிப்பது, எப்போது திண்டிவனம் - கடலுார் ரயில்வே திட்டம் புதுச்சேரி வழியாக துவங்குவது என ரயில் பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திண்டிவனம் - நகரி பாதை கிடப்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டம் 2006ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஏறத்தாழ 180 கி.மீ., துாரம் உடைய இந்த ரயில்பாதை, திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை வழியாக நகரி செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது.

போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னையால், இந்த திட்டப் பணியில் பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டது. தற்போது, மாநில அரசு போதிய நிலம் ஒதுக்கிய பின்னரும், பணிகள் மெத்தனமாகவே நடக்கின்றன. இந்த திட்டம் துவங்கி, 19 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், 50 சதவீத பணிகளே முடிக்கப்பட்டுள்ளன.

திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைக்கு, 2006ல் மொத்த திட்ட மதிப்பீடு, 582 கோடி ரூபாயாக இருந்தது. இந்த திட்ட மதிப்பு தற்போது, 3,631.34 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் புதுச்சேரி -கடலுார் ரயில்வே திட்டத்தை இணைத்து செயல்படுத்தினால் அவ்வளவு தான். வழக்கம்போல் பல ஆண்டுகள் ஆனாலும் இத்திட்டம் ஒரு அங்குலமும் நகராது.

எனவேதான், திண்டிவனம் - நகரி ரயில்வே திட்டம் ஒருபக்கம் நடந்து வந்தாலும், மற்றொரு பக்கம் புதுச்சேரி- கடலுார் ரயில்வே திட்டத்தை தனியாக பிரித்து துவங்க வேண்டும் என சர்வேயின்போது மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி-கடலுார் பாதை

திண்டிவனம் ரயில் நிலையம்- மயிலம் - சேதராப்பட்டு - வில்லியனுார் - பாகூர் - மேல்வார்க்கால்பட்டு - கடலுார் வரை இந்த ரயில்வே திட்டம் அமையும்.



பொருளாதார வளர்ச்சி

புதுச்சேரிக்கு விழுப்புரத்தில் இருந்து மட்டுமே ரயில் பாதை இணைப்பு உள்ளது. எனவே, எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் விழுப்புரம் சென்று அருங்கிருந்தே பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள் ளது. திண்டிவனம் - புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால், கடலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் இணைப்பு கிடைத்திருக்கும். மேலும், வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் நின்று செல்லும் முக்கிய நிறுத்தமாக புதுச்சேரி ரயில் நிலையம் உருவெடுத்திருக்கும். இது, புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திருக்கும். இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருந்தால், திண்டிவ னம், கடலுார் சாலைகளில் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் பெருமளவில் குறைந்திருக்கும்.



போக்குவரத்து நெரிசல்

குறைவான போக்குவரத்து மதிப்பீடுகள் காரணமாக, திண்டிவனம் - கடலுார் திட்டம் இன்னும் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படவில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டத்தில் இந்த சிக்கல் இருக்கவே இருக்காது. புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்ல பஸ்சை விட்டால் வேறு வழியில்லை. இதனால், புதுச்சேரியில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, கடலுார் வழித்தடத்தில் நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கினாலும், கூட்டம் குறைந்தபாடில்லை. பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பஸ்களில் தொங்கி கொண்டு பயணிக்கும் நிலையே உள்ளது. இந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையோடு புதுச்சேரி - கடலுார் ரயில்வே திட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு புதுச்சேரி சேதராப்பட்டில் இருந்து திண்டிவனம் வரை ரயில்வே இணைப்பு திட்டத்தை தனியாக பிரித்து செயல்படுத்தலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us