/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கோட்டேரி - வீரட்டிக்குப்பம் சாலைக்கு விமோசனம் எப்போது? வனத்துறை அனுமதி வழங்காததால் 'கிடப்பில்'கோட்டேரி - வீரட்டிக்குப்பம் சாலைக்கு விமோசனம் எப்போது? வனத்துறை அனுமதி வழங்காததால் 'கிடப்பில்'
கோட்டேரி - வீரட்டிக்குப்பம் சாலைக்கு விமோசனம் எப்போது? வனத்துறை அனுமதி வழங்காததால் 'கிடப்பில்'
கோட்டேரி - வீரட்டிக்குப்பம் சாலைக்கு விமோசனம் எப்போது? வனத்துறை அனுமதி வழங்காததால் 'கிடப்பில்'
கோட்டேரி - வீரட்டிக்குப்பம் சாலைக்கு விமோசனம் எப்போது? வனத்துறை அனுமதி வழங்காததால் 'கிடப்பில்'
ADDED : ஜூன் 20, 2024 08:55 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கோட்டேரி - வீரட்டிக்குப்பம் இடையே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - முத்தாண்டிக்குப்பம் சாலை வழியாக பஸ், லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பண்ருட்டி, கடலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, சாலையில் கோட்டேரி - வீரட்டிக்குப்பம் இடையிலான 2 கி.மீ., துாரம் வனத்துறை கட்டுப்பாடில் உள்ளதால், வனத்துறை அனுமதி கிடைக்காமல், விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டது.
சாலையில், இப்பகுதி மட்டும் மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னை குறித்து, கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார். அதில், கோட்டேரி - வீரட்டிக்குப்பம் வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முன்று மீட்டர் அகலம் கொண்ட சாலையாக உள்ளதால் அவசர காலங்களில் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது. எனவே, வனத்துறை அனுமதியோடு சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்; 1980 முன் போடப்பட்ட சாலையாக இருந்தால் நாங்கள் என்.ஓ.சி., கொடுக்க வேண்டும். பின்பு போடப்பட்ட சாலையாக இருந்தால் பரிவேஷ் போர்டலில் அப்ளை செய்த பின், அதற்கான ஆவணங்களை கொடுத்தால் பரிசீலிக்கப்படும் என, பதிலளித்தார். ஆனால், சட்டசபையில் கோரிக்கை வைத்து ஓராண்டுகள் கடந்தும், இதுவரை சாலை விரிவாக்க பணிக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், மக்களின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் இருந்து விருத்தாசலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏராளமான ஆசிரியைகள் பைக்கில் பள்ளி, கல்லுாரிளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் இந்த பகுதியில் பைக்கில் வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளதால், வீடு திரும்பும் ஆசிரியைகளை பைக் திருடர்கள் பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நிலை உள்ளது.
கடலுாருக்கு மாற்று பாதை..
விருத்தாசலம் - கடலுார் முக்கிய சாலையில் பேரிடர் காலங்களில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சாலையை மாற்று பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, கோட்டேரி - வீரட்டிக்குப்பம் இடையே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடி்ககை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து விருத்தாசலம் வனக்காப்பாளர் ரகுவரன் கூறுகையில், சாலை விரிவாக்க பணிக்கு அனுமதி கேட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இந்த வாரத்திற்குள் அனுமதி வந்துவிடும். அதன்பின், சாலை விரிவாக்க பணிகள் துவங்கும் என்றார்.