/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பயன்பாட்டிற்கு வராமல் பல கோடி செலவிலான திட்டங்கள்... வீண்பயன்பாட்டிற்கு வராமல் பல கோடி செலவிலான திட்டங்கள்... வீண்
பயன்பாட்டிற்கு வராமல் பல கோடி செலவிலான திட்டங்கள்... வீண்
பயன்பாட்டிற்கு வராமல் பல கோடி செலவிலான திட்டங்கள்... வீண்
பயன்பாட்டிற்கு வராமல் பல கோடி செலவிலான திட்டங்கள்... வீண்
ADDED : ஜூலை 11, 2024 04:20 AM

நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியம்
தமிழகம் முழுவதும் ஏழை மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோய்கள் பரவுவதை தடுக்க முன்னாள முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், உள்ளாட்சிகளில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. அதன்படி, நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ. 58 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
ஒரு சில இடங்களில் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்தது. பல இடங்களில் திறக்கபடாமலே வீணாகியுள்ளது.
பயன்படுத்தப்படாமல் வீணாகி சுகாதார வளாகங்கள், பல லட்சம் செலவு செய்து சீரமைத்தும், வான்பாக்கம் உட்பட பல இடங்களில் சுகாதார வளாகங்கள் திறக்கபடவில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் ரூ. 80 லட்சம் செலவில் நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதியில் சிமென்ட் களம் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை ஒரு நாள் கூட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படவில்லை.
அதேபோன்று, ரூ. 1 கோடி செலவில், மக்களின் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்பட்டு, செயல்படவில்லை.
சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. மேலும், ஆலை ரோட்டில் ரூ. 30 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டி செயல்படாமல் உள்ளது.
இதுவும், சமூக விரோதிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு, புகலிடமாக மாறியுள்ளது.
இதேபோன்று, பல இடங்களில் கட்டப்பட்ட ரேஷன் கடைகள் திறக்காமலேயே வீணாகி வருகிறது.
தற்போது அண்ணாநகர், முள்ளிகிராம்பட்டு உட்பட பல இடங்களில் பல லட்சம் செலவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டும், திறப்பு விழா காணாமல் காட்சி பொருளாக மாறியுள்ளது.
இப்படியாக, நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அலட்சியம் காரணமாக, பல கோடி ரூபாய் செலவில் கொண்டுவரப்பட்ட, பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகி வருகிறது.
எனவே, நெல்லிக்குப்பம் நகராட்சியில் செயல்பாட்டிற்கு வராத திட்டங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.