/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இன்று ஓட்டு எண்ணிக்கையால் அரசியல் கட்சியினர்... திக் திக்; கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்இன்று ஓட்டு எண்ணிக்கையால் அரசியல் கட்சியினர்... திக் திக்; கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இன்று ஓட்டு எண்ணிக்கையால் அரசியல் கட்சியினர்... திக் திக்; கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இன்று ஓட்டு எண்ணிக்கையால் அரசியல் கட்சியினர்... திக் திக்; கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இன்று ஓட்டு எண்ணிக்கையால் அரசியல் கட்சியினர்... திக் திக்; கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜூன் 04, 2024 05:13 AM

கடலுார் : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதையொட்டி, கடலுார் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் முடிந்து, ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் முடிந்த நிலையில் இன்று (4ம் தேதி) ஓட்டுகள் எண்ணப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில், கடலுார் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் உள்ள நிலையில், கடலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கை, தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியிலும், சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை, அரியலுார் மாவட்டம் தத்தனுாரில் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
கடலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண்தம்புராஜ் கூறுகையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தபால் ஓட்டுக்கள் நாளை (4ம் தேதி) காலை 5:30 மணியளவில் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, காலை 6:30 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்குட்பட்ட அறைகள் திறக்கப்படும். 7:00 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் கண்டிப்பாக வர வேண்டும். 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கும்.
தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கப்படும். கடலுார் மற்றும் நெய்வேலி தலா 17, விருத்தாசலம் 21, பண்ருட்டி 19, திட்டக்குடி 18, குறிஞ்சிப்பாடி 19 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
சிதம்பரம்
சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலுார் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணா கூறுகையில், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட குன்னம் சட்டசபை தொகுதிக்கு 23 சுற்றுகள், அரியலுார் 22, ஜெயங்கொண்டம் 21, புவனகிரி 21, சிதம்பரம் 19, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கு 18 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் மற்றும் 1 நுண்பார்வையாளர் என, மொத்தம் 56 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர்.
ஓட்டு எண்ணும் பணியில் மொத்தம் 336 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுற்றுகள் வாரியான ஓட்டு எண்ணிக்கை நிலவரம், ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படும்.
காவல்துறை அதிகாரிகள் உட்பட 880 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில், 995 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுகள் எண்ணும் மையத்திற்குள் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், மொபைல் எடுத்து வர அனுமதி இல்லை என, தெரிவித்தார்.
பாதுகாப்பு தீவிரம்
ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதையொட்டி, கடலுார், சிதம்பரம் தொகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சியினர் திக்.. திக்.. மனநிலையில் உள்ளனர்.
மேலும் ஓட்டு எண்ணிக்கை நடப்பதையொட்டி, மாவட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க, எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் அசோககுமார், அர்னால்டு ஈஸ்டர், பிரபாகரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
12 டி.எஸ்.பி.,க்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், துணை ராணுவ வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல்படை வீரர்கள் என,மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.