/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தாசலத்தில் மாசிமக திருவிழா மணிமுக்தாற்றில் குவிந்த பொதுமக்கள்விருத்தாசலத்தில் மாசிமக திருவிழா மணிமுக்தாற்றில் குவிந்த பொதுமக்கள்
விருத்தாசலத்தில் மாசிமக திருவிழா மணிமுக்தாற்றில் குவிந்த பொதுமக்கள்
விருத்தாசலத்தில் மாசிமக திருவிழா மணிமுக்தாற்றில் குவிந்த பொதுமக்கள்
விருத்தாசலத்தில் மாசிமக திருவிழா மணிமுக்தாற்றில் குவிந்த பொதுமக்கள்
ADDED : பிப் 25, 2024 05:14 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவில், லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் திதி கொடுத்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா, 15ம் தேதி துவங்கியது. தினமும் காலை பல்லக்கிலும், இரவில் சிறப்பு வாகனங்களிலும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக ஆறாம் நாள் உற்சவத்தில், கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு சாமி காட்சி தரும் ஐதீக நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று மாசிமகப் பெருவிழா நடந்தது. இந்நாளில், மணிமுக்தாற்றில் முன்னோருக்கு திதி கொடுப்பது, காசிக்கு சென்று திதி கொடுப்பதை விட புண்ணியம் என்பதால், 'காசியை விட வீசம் பெருசு விருத்தகாசி' என்ற ஆன்மிக வரலாறும் உள்ளது. அதன்படி, நேற்று நள்ளிரவு 1:00 மணி முதல், மணிமுக்தாற்றில் லட்சக்கணக்கானோர் திதி கொடுத்து, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
மாலை 3:00 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி எழுந்தருளினார். மாலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். நாளை அதிகாலை தெப்பல் உற்சவத்தில் சண்முக சுப்ரமணியர் அருள்பாலிக்கிறார்.
விஜயகாந்துக்கு திதி
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் தனசேகர் தலைமையில் விஜயகாந்த் படத்துக்கு அரிசி, எள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து, மணிமுக்தாற்றில் திதி கொடுக்கப்பட்டது.