/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 13, 2025 09:09 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பம் நகர பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 10 இடங்களுக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீரின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை சரி செய்ய குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 42 கோடி ரூபாய் மதிப்பில் விஸ்வநாதபுரம் உட்பட 4 இடங்களில் பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
15 நாட்களுக்கு முன் விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜையை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார். இந்நிலையில் இந்த பணிக்காக பைப்புகளை ஏற்றி கொண்டு மூன்று நாட்களுக்கு முன் 3 லாரிகள் வந்தன.
அப்போது, இப்பகுதி மக்கள் 'விவசாயத்தை நம்பியே உள்ளோம். ஆழ்துளை கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும்' எனக் கூறி லாரிகளை சிறை பிடித்ததால் லாரிகள் திரும்பி சென்றன.
இந்நிலையில், நேற்று காலை கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், மலையான், அருள்பிரகாஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
பின், ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என, வலியுறுத்தி சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.