Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு

ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு

ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு

ரூ. 24 கோடியில் நவீன சுத்திகரிப்பு நிலையம்: விரைந்து முடிக்க விருதை மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 01, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றை பாதுகாக்கும் வகையில் 24 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தில் இங்கு மட்டுமே செராமிக் தொழிற்பேட்டை, அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லுாரியும் உள்ளன.

இங்குள்ள லட்சக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் மணிமுக்தாற்றில் விடப்படுகிறது. இவை ராட்சத வடிகால் மூலம் நகர பகுதியில் 14 இடங்களில் ஆற்றில் விடப்படுவதால், சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது.

மணிமுக்தாறு புண்ணிய நதி


விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கடந்த காலங்களில் மணிமுக்தாற்றில் நீராடிவிட்டு பக்தர்கள் சென்றதாக வரலாறு உள்ளது. 'காசியைவிட வீசம் பெருசு, விருத்தகாசி' என்ற ஆன்மிக பெயரும் உள்ளது. காசிக்கு சென்று கங்கையில் நீராடி பாவங்களை போக்குவதை விட, மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பதே இதன் பொருள். இப்படியான புண்ணிய நதி, கழிவுநீர் சூழ்ந்து, முட்புதர்கள் மண்டி, மினி கூவம்போல காட்சியளிக்கிறது.

தடுப்பணை கட்ட அனுமதி இல்லை


வெள்ள காலங்களில் மட்டுமே மணிமுக்தாற்றில் நீர்வரத்து இருக்கும் நிலையில், கோடைகாலங்களில் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் நகரில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் செயலிழந்து 2 முதல் 4 லட்சம் வரை புதிதாக போர்வெல் போடும் நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது 200 முதல் 350 அடிக்கு கீழே போர்வெல் போடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த கலைச்செல்வன், நகரில் தடுப்பணை கட்ட முயற்சி எடுத்தார். அப்போது ஆய்வு செய்த சென்னை நபார்டு குழுவினர், கழிவுநீர் வரத்து இருக்கும் பகுதியில் தடுப்பணை கட்ட முடியாது என கைவிரித்து விட்டனர். இதனால் தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

விருத்தாசலம் நகருக்கு என்.எல்.சி., உதவியது


விருத்தாசலம் நகர மக்களின் நலன் கருதி என்.எல்.சி., இந்தியா நிறுவனம் உதவ முன்வந்தது. அதன்படி, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 85 லட்சம் ரூபாயில் கழிவுநீரை சுத்திகரித்து, மணிமுக்தாற்றில் திருப்பி விடும் முயற்சி நடந்தது.

ஆனால், இத்திட்டம் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்க முடியாது என்பதை அப்போதைய கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டபோது தெரிந்தது. இதனால், மணிமுக்தாற்றின் கரைகளில் 6 இடங்களில் போடப்பட்ட சுத்திகரிப்பு தொட்டிகள் பாதியுடன் நிறுத்தப்பட்டன.

கழிவுநீரை சுத்திகரித்து தெளிந்த நீராக மணிமுக்தாற்றில் விட்டால் மட்டுமே தடுப்பணை கட்ட முடியும்.

வெள்ள காலத்தில் பாய்ந்தோடும் மழைநீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அதிகாரிகள் குழுவும் ஆய்வு செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் உறுதிப்படுத்தியது.

ரூ. 24 கோடி புதிய திட்டம்


நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்து மணிமுக்தாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரை முழுமையாக ராட்சத குழாய்கள் மூலமாக ஒரே இடத்தில் சுத்திகரித்து, மணிமுக்தாற்றில் விடும் திட்டம் குறித்து நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையிலான நிர்வாகம் ஆய்வு நடத்தியது.

இதற்காக, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியின் பின்புறம் மணிமுக்தாற்றின் கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், எளிதாக அமையும் எனவும் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, மூல கழிவுநீரை ராட்சத குழாய்கள் வழியாக கொண்டு வந்து, 8 மெகா பிரிவுகள் மூலம் சுத்திகரித்து, தெளிந்த நீராக மாற்றி, மணிமுக்தாற்றில் விட 24 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இது தொடர்பாக, உள்ளூர் அமைச்சர் கணேசன் பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேறினால், பல ஆண்டுகளாக ஆற்றில் விடப்படும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதுடன், தடுப்பணையை கட்டி, குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து ஒப்புதல் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து நகராட்சி சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் கூறுகையில், விருத்தாசலம் நகராட்சியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

புண்ணிய நதியான மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், துாய்மையை மேம்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அமைச்சர் கணேசன் தீவிர முயற்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை விருத்தாசலம் நகராட்சிக்கு கொண்டு வர முன்மொழிந்துள்ளது.

இத்திட்டம் மூலம் ஒவ்வொரு வார்டுகளில் இருந்தும் கழிவுநீர் வடிகால்கள் மூலமாக சேகரித்து, சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு கழிவுநீரை துாய்மைப்படுத்தி, துாய நீராக மாற்றி, மணிமுக்தாற்றில் விடப்படும்.

இதன் மூலம் நீர்மட்டமும், மணிமுக்தாற்றின் புனிதமும் பாதுகாக்கப்படும். இதனால் நகரம் மட்டுமல்லாது மணிமுக்தாற்றை ஒட்டிய கிராமங்களும், விவசாய நிலங்களுக்கும் தண்ணீரை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். விரைவில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us