கோலப்போட்டி: விழிப்புணர்வு கோலங்கள்
கோலப்போட்டி: விழிப்புணர்வு கோலங்கள்
கோலப்போட்டி: விழிப்புணர்வு கோலங்கள்
விழிப்புணர்வு கோலங்கள்
ரங்கோலி மற்றும் டிசைன் கோலங்களில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை போட்டனர். இதில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, தண்ணீர் பாதுகாப்பு, சிறுதானியங்கள் பயன்பாடுகள், பறவைகள் பாதுகாப்பு, காய்கறிகள் பயன்பாடு, பருப்பு வகைகள், உப்பு, முட்டை ஓடு உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வு தொடர்பான கோலங்கள் இடம் பெற்றிருந்தன.
தேச தலைவர்கள்
ரங்கோலி, டிசைன் கோலங்களில் காந்தி, நேதாஜி, அப்துல் கலாம் போன்ற தேச தலைவர்கள் மற்றும் ஆண்டாள், விநாயகர், ஐயப்பன், கிருஷ்ணர், சிவன் உள்ளிட்ட கடவுள்கள், பொங்கல் பண்டிகை தொடர்பான கோலங்கள் அதிகளவில் போடப்பட்டிருந்தன. மேலும், கோல மாவு பயன்படுத்தாமல் வாட்டர் பாட்டிலின் 400க்கும் மேற்பட்ட மூடியால் ஒருவர் கோலம் போட்டிருந்தார்.
கர்ப்பிணி பெண் பெருமிதம்
கடலுாரில் தினமலர் நாளிதழ், ருசி பால் சார்பில் நேற்று நடந்த கோலப்போட்டியில், அதிகாலை 5 மணிக்கே வந்து நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஆர்வத்தோடு கலந்துகொண்டு கோலமிட்டார். அவருக்கு, 5ம் பரிசாக சைக்கிள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற நிரோஷா கூறுகையில், தினமலர் அறிவித்த கோலப்போட்டியில் ஆர்வமாக கலந்துகொண்டேன். மார்கழி மாதத்தில் கோலமிடுவது ஆரோக்யம் தருகிறது. கர்ப்பிணியாக இருந்தபோதும், கோலப்போட்டியில் பங்கேற்றதும், பரிசு வென்றதும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தினமலருக்கு நன்றி என்றார்.
கோலத்தையும் ஆட்கொண்ட 'கூகுள் ஆப்'
கடலுாரில் தினமலர், ருசிபால் சார்பில் கோலப்போட்டி நேற்று காலை நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோலமிட்டு அசத்தினர். குறிப்பாக, கடலுார் விநாயகபுரம் சுந்தரி என்பவர், கேழ்வரகு, கம்பு, சோளம், மொச்சை, சிவப்பரிசி உள்ளிட்ட பல தானியங்களால் கோலமிட்டு கவர்ந்தார். இதேபோல், தற்போது இணையதளம், செல்போன்களை ஆக்கிரமித்துள்ள கூகுள் ஆப்ஸ்களையும் (வாட்ஸ்அப், ஜி மெயில், யூ டியூப் சிம்பல்கள்) கடலுாரை சேர்ந்த ஒரு தம்பதியர் வண்ணகோலமாக வரைந்து, வியப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதேபோல், பப்பாளி சிலைஸ் துண்டுகள் மூலம் வண்ண சாயம் கலந்து, தமிழரசி என்பவர் ஈர்க்கும் வகையில் கோலமிட்டிருந்தார். இதேபோல், தை பொங்கல், விவசாயி, மணல் சிற்பம், தலைவர்கள் படங்களையும், வண்ண கோலமிட்டு பலர் அசத்தியிருந்தனர்.
வெளி மாவட்ட பெண்கள் ஆர்வம்
கடலுார் சில்வர் பீச்சில் நடந்த கோலப் போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக, கடலுார் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும் பல கி.மீ., துாரங்களை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோலமிட்டனர்.