ADDED : ஜன 08, 2024 05:49 AM

புதுச்சத்திரம்: பெருமாள் ஏரி நிரம்பியதால் ஏரியின் பாசன பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நவரை பட்ட நெல் சாகுபடியை உற்சாகத்துடன் துவங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நவரை பட்டமாகும்.
இந்த பட்டத்தில் 120 நாட்களுக்கு குறைவான வயதுகொண்டநெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
புதுச்சத்திரம் சுற்று பகுதிகளான தானுார் , சம்பாரெட்டிப்பாளையம், கருவேப்பம்பாடி,
சிறுபாளையூர், மேட்டுப் பாளையம், மேல்பூவாணிக்குப்பம், கீழ்பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம், பள்ளிநீரோடை, கம்பளிமேடு, பெத்தாங்குப்பம், கள்ளுக்கடைமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில், பெருமாள் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் நவரைப் பட்டத்திற்கு ஆண்டுதோறும் நெல் பயிரிட்டு வருகின்றனர். மற்ற பகுதிகளில் புழுதியில் நேரடி நெல் விதிப்பு முறை அல்லது நாற்றங்கால் அமைத்து, நாற்று விட்டு அதன் பின்பு நடவு செய்யும் முறை பின்பற்றுவர்.
ஆனால் இப்பகுதி விவசாயிகள் சேடை உழவு செய்து, தெளிவு வைத்து நேரடி நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெருமாள் ஏரியில் போதுமான தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் ஏராளமான விவசாயிகள் நவரை பருவத்திற்கு, நெல் சாகுபடி செய்யவில்லை. ஆனால் போர்வெல் வைத்துள்ள விவசாயிகள் மட்டும், கடந்த சில ஆண்டுகளாக நவரைப் பட்டத்திற்கு நெல் சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு பெருமாள் ஏரி முழுவதுமாக துார்வாரப்பட்டு, மழைநீர் தேங்கி தண்ணீர் முழுகொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் இந்தாண்டிற்கு நவரை பட்டத்திற்கு, நெல் சாகுபடி செய்ய ஆர்வமடைந்தனர். அதையொட்டி நிலங்களில் தண்ணீர் பாய்ச்சி சேடை உழவு செய்தனர். பின்னர் இயற்கை உரங்களை தெளித்து, மீண்டும் உழவு செய்து நிலங்களை சமன் செய்தனர். அதை தொடர்ந்து சேடையில் நேரடி நெல் விதைப்பு செய்து, நவரை பருவத்திற்கு சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.
மேலும் மேட்டூரில் நீர் மட்டம் குறைவாக உள்ளதால், டெல்டா பகுதிகளில் நெல் உற்பத்தி குறையும். இதனால் இந்த பருவத்தில் நெல் விதைப்பு செய்தால், அதிக அளவு லாபம் ஈட்ட முடியும் என்ற நினைப்பில், இப்பகுதி விவசாயிகள் நவரை பருவத்திற்கு நெல் சாகுபடி செய்ய, ஆர்வம் காட்டி வருகின்றனர்.