/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருதை புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் ... தயார்; இணைப்பு சாலைக்கு நிலம் ஆர்ஜித பணி மந்தம்விருதை புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் ... தயார்; இணைப்பு சாலைக்கு நிலம் ஆர்ஜித பணி மந்தம்
விருதை புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் ... தயார்; இணைப்பு சாலைக்கு நிலம் ஆர்ஜித பணி மந்தம்
விருதை புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் ... தயார்; இணைப்பு சாலைக்கு நிலம் ஆர்ஜித பணி மந்தம்
விருதை புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் ... தயார்; இணைப்பு சாலைக்கு நிலம் ஆர்ஜித பணி மந்தம்
ADDED : செப் 20, 2025 06:45 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இணைப்பு சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா லிட்., சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
இதனால் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி வரை, புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கடலுார் சாலையில் இருந்து உளுந்துார்பேட்டை செல்லும் ஜங்ஷன் சாலை புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.
இந்நிலையில், கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) மாநில சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
பின்னர், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து வேளாண் அறிவியல் நிலையம் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 37 கோடி ரூபாயில் சர்வீஸ் சாலையுடன், புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது.
அதன்பின், மேம்பாலத்தில் இருந்து வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை யுடன் இணையும், விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையை 67 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது. இதற்காக மின் கம்பங்கள் இடமாற்றம், மழைநீர் வடிகாலுடன் சாலையை விரிவாக்கம் செய்து, புறவழிச்சாலையின் குறுக்கே செல்லும் மணிமுக்தாற்றில் கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
இதற்காக, நவீன தொழில்நுட்பம் மூலம், ஆற்றில் பில்லர்கள் மட்டும் கட்டி, அதன் மேல் தளங்கள் (ஸ்பேன்கள்), அழுத்தம் முறையில், ஸ்டெரிங் தொழில்நுட்பத்தில் 30.5 மீ., நீளத்தில், 60 டன் எடையில், ராட்சத கிரேன்கள் மூலம் பொருத்தப்பட்டன.
தற்போது மேல்தளம் பொருத்தப்பட்டு, பக்கவாட்டின் இருபுறம் பாதசாரிகள் செல்லும் வகையில் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், புறவழிச்சாலையுடன் பாலத்தை இணைக்கும் பணிகள் மட்டுமே மீதமுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும். இதனால் எதிரெதிர் திசையில் வாகனங்கள் விபத்து அபாயமின்றி எளிதில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாலத்தின் மறுமுனையில் புறவழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைக்க தனியாரிடம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் பாலம் பணிகள் நிறைவடைந்தும், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல், கட்டுமான பணி நிறைவடையாமல், இருபுற சாலையில் பாலத்திற்கு முன்னதாக 200 மீ., தொலைவில் தடுக்கப்பட்டு, ஒருவழியாக எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் செல்கின்றன. இதனால், நெடுந்துார வாகனங்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.