/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள்... ஆர்வம் மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள்... ஆர்வம்
மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள்... ஆர்வம்
மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள்... ஆர்வம்
மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள்... ஆர்வம்
ADDED : ஜூலை 09, 2024 05:43 AM

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், எரப்பாவூர், கோவிலுார், எடையூர், நரசிங்கமங்கலம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மழையை நம்பியே மானாவாரி பயிரான சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு போன்ற சிறுதானியங்கள், துவரை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து போன்ற பயறு வகைகள், வேர்க்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களை ஆண்டுதோறும் ஜூன் மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை சாகுபடி செய்வது வழக்கம்.
அதன்படி, நடப்பு மானாவாரி பட்டத்திற்கு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களை டிராக்டர் மூலம் உழுது, சமன் செய்து கோடை மழைக்கு காத்திருக்கின்றனர்.
ஆனால் போதிய மழையின்றி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விதைப்பு பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை, ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை, அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற கணக்கில், காலம் காலமாக மானாவாரி, சம்பா, குறுவை உள்ளிட்ட சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழை உள்ளிட்ட காரணங்களால் மானாவாரி பரப்பளவு குறைந்தும்; பெரும்பாலான மானாவாரி நிலங்கள் தரிசாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் மாறி வருகிறது.
நடப்பு மானாவாரி பட்டத்திற்கு (ஜூன் - ஜூலை) தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
இதுவரை போதிய மழை இல்லை. மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மானாவாரி நிலங்களை விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது சமன்படுத்தி விதைப்பு பணிக்காக காத்திருக்கின்றனர்.
வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள எரப்பாவூர், மதுரவள்ளி, சிறுமங்கலம், கோவிலுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் எள், கம்பு, மக்காச்சோளம், பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்களை மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்வார்கள்.
தற்போது வயல்களை உழுது சமன்படுத்தி வருகின்றனர். இம்மாதம் இறுதியில் மழை பெய்தால் எள் மற்றும் கம்பும்; தொடர்ச்சியாக ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மக்காச்சோளம்; ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள்' என்றார்.