/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடிப்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடிப்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடிப்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடிப்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடிப்பு
ADDED : ஜூலை 02, 2025 08:14 AM

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கோவில் சித்சபையில் இருந்து நடராஜர், சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். 'வா வா நடராஜா... வந்துவிடு நடராஜா' என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேருக்கு முன், சிவனடியார்கள், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசம் பாடியபடி சென்றனர். பக்தர்கள் சிவ தாண்டவம் ஆடினர். வீதிகளில் மண்டகபடிதாரர்கள் படையல் செய்தனர். பருவத ராஜகுல மரபினர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, பாரம்பரிய வழக்கப்படி பட்டு சாத்தி வரவேற்பு அளித்தனர்.
கீழ வீதியில் நிலைக்கு சென்றதும், இரவு 8:30 மணியளவில் தேரில் இருந்து சுவாமிகள் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று திருமஞ்சன தரிசன விழா, நாளை பஞ்சமூர்த்திகள் முத்துப் பல்லக்கில் வீதியுலா, 4ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.