/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி கிடப்பில்! விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி கிடப்பில்! விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி கிடப்பில்! விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி கிடப்பில்! விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி கிடப்பில்! விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2024 12:26 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, விவசாயிகள் கோரிக்கை ஏற்று, ரூ. 7.85 கோடி செலவில் துவங்கப்பட்ட பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அருகே பெலாந்துறை அணைக்கட்டு உள்ளது. அங்கு, வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ம் ஆண்டு, 200.80 மீட்டர் நீளத்தில், அப்பகுதி விவசாய பாசனத் திற்காக அணை கட்டப்பட்டது.
இதன் மூலம், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீரை பயன்படுத்தி கரும்பு, நெல், கேழ்வரகு மற்றும் தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் டி.வி.புத்தூர், ராஜேந்திரப்பட்டிணம், ஆனந்தகுடி, கொக்கரசம்பேட்டை, குணமங்கலம், திருபுத்தூர், மேல்புளியங்குடி, வக்கரமாரி, நகரப்பாடி, சேல்விழி, கலியன்குப்பம், ஸ்ரீ நெடுஞ்சேரி, கானூர், கலிங்கனேரி, பாண்டியன் பெரிய ஏரி, பாண்டியன் சித்தேரி, பூவனேரி, பாளையங்கோட்டை ஏரி என 18 ஏரிகள் பாசன கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறுகின்றன.
பெலாந்துறை அணைக்கட்டு முறையாக பராமரிப்பின்றி, பில்லர்கள், கரைகள், பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தன. இதனால் அணையில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அணையில் அவ்வப்போது சிறுசிறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தண்ணீர் தேக்க முடியாத நிலை தொடர்ந்தது.
இந்நிலையில், அணைக் கட்டை புனரமைக்க வேண்டும் என சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்று, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நீர்வளம் மற்றும் நிலவள திட்ட நிதியில், 7 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணையில் பில்லர்கள், இருபுறம் உள்ள கரைகள், அணைக்கு தண்ணீர் வரத்து பகுதியில் உள்ள சிறுபாலங்கள், கீழ் மற்றும் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்கள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் துவங்கியது.
அதில், பில்லர்களில் சிமெண்ட் பூச்சு மட்டுமே பணி நடந்துள்ளது. வர்ணம் பூசவில்லை. அதுபோல், இருபுறமும் உள்ள கரைகளில் கல் பதிக்கும் பணிகள், பார்வையாளர்கள் பார்வையிடும் பகுதியில் தடுப்புகள் அமைக்காமல் இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், அணை வலுவிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பார்வையாளர்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்காததால் மக்கள் தண்ணீரில் தவறி விழுவதுடன், அணை பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளும் தவறி தண்ணீரில் விழும் அபாயம் உள்ளது.
எனவே, பெலாந்துறை அணைக்கட்டில் பார்வையாளர் பகுதியில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து பெலாந்துறை விவசாயி ஒருவர் கூறுகையில், 'அணை புனரமைப்பு பணிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன் துவங்கியது. பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் அணை மற்றும் கரைகள் வலுவிழந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கிடப்பில் போடப்பட்ட அணை புனரமைப்பு பணிகளை மீண்டும் துவக்க கலெக்டர், அமைச்சர் ஆய்வு செய்து, அணை புனரமைப்பு பணி களை தொடங்க நடவடிக்கை வேண்டும்' என்றார்.