ADDED : ஜன 06, 2024 06:17 AM

திட்டக்குடி, : திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி சிவன் கோவில்களில், மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், வில்வ மாலை, எலுமிச்சம்பழ மாலை, அரளி மாலை, திராட்சைப்பழ மாலைகளால் சுவாமி அருள்பாலித்தார். சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய், நீர் பூசணிக்காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு: வீரட்டானேஸ்வரர், நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.