/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீஸ் இருந்தும் பயனில்லை... பண்ருட்டியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு எப்போது போலீஸ் இருந்தும் பயனில்லை... பண்ருட்டியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு எப்போது
போலீஸ் இருந்தும் பயனில்லை... பண்ருட்டியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு எப்போது
போலீஸ் இருந்தும் பயனில்லை... பண்ருட்டியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு எப்போது
போலீஸ் இருந்தும் பயனில்லை... பண்ருட்டியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு எப்போது
ADDED : ஜூன் 19, 2024 01:23 AM
கடலுார் மாவட்டத்தில், முக்கிய வியாபார நகரமாக பண்ருட்டி உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. சென்னையில் இருந்து தஞ்சாவூர் மார்க்கம் மற்றும் கடலுாரில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சந்திப்பாக பண்ருட்டி உள்ளது.
இதனால் பண்ருட்டி வழியாக பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது.
மேலும், சுற்றியுள்ள கிராம மக்கள் பொருட்கள் வாங்கவும், பள்ளி, அரசு அலுவலகங்கள், கோர்ட் உள்ளிட்ட பணிகளுக்காக அதிகம் வருகின்றனர். பஸ் நிலையத்திலும் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளும் ஏராளம். இப்படி போக்குவரத்து நெரிசல் மிகந்த நகரமாக பண்ருட்டி உள்ளது.
இதனால், போக்குவரத்திற்கென தனி போலீஸ் நிலையம் உள்ளது. இன்ஸ்பெக்டர், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், சிற்பபு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என, ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.
ஆனாலும், போக்குவரத்து நெரிசல் நகரில் குறைந்தபாடில்லை அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து சீரமைப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட போலீசார், அப்பணியில் ஆர்வம் காட்டாமல், வாகன சோதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தினமும் காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரையில் சித்திரைசாவடி, கண்டரக்கோட்டை, கடலுார் சாலையில் ரயில்வே கேட், தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் ஏரியா பிரித்துக்கொண்டு வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
பைக், கார், வேன், சரக்குவேன் என வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதால் கலெக்ஷன் குவிகிறது. டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதுபோல், இங்கும் கட்டணம் செலுத்தினால்தான், அங்கிருந்த நகர முடியும் என்ற நிலையில், கறார் வாகன சோதனை நடக்கிறது.
இதனால், வாகன சோதனயில் மட்டுமே போக்குவரத்து போலீசார் ஈடுபடும் நிலையில், பண்ருட்டியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்களால் முழு அளவில் போக்குவரத்து சீரமைப்பு பணியை கவனிக்க முடியாத நிலையில், அவதியடைகின்றனர்.
பண்ருட்டியில் போக்குவரத்து சீரமைப்புக்கு போதுமான போக்குவரத்து போலீசார் இருந்தும், தங்களுக்கான பணியில் அவர்கள் ஆர்வம் காட்டாதது, பொதுமக்களிடையே போலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, கடலுார் எஸ்.பி., இந்த விஷயத்தில் தலையிட்டால் மட்டுமே, மீண்டும் பண்ருட்டி நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.