Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மெத்தனால் வந்தது எப்படி? விருதை செராமிக் நிறுவனத்தில் விசாரணை

மெத்தனால் வந்தது எப்படி? விருதை செராமிக் நிறுவனத்தில் விசாரணை

மெத்தனால் வந்தது எப்படி? விருதை செராமிக் நிறுவனத்தில் விசாரணை

மெத்தனால் வந்தது எப்படி? விருதை செராமிக் நிறுவனத்தில் விசாரணை

ADDED : ஜூன் 23, 2024 04:57 AM


Google News
விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான மெத்தனால் சப்ளை குறித்து விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் சாராயத்தை குடித்து 54 பேர் இறந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்னைக்கு காரணமான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாதேஷ் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலம் 'மெத்தில் டெர்மைட்' என்ற வேதிப்பொருள் அடங்கிய 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 பாரல்களை, விருத்தாசலம் செராமிக் நிறுவனத்தின் பெயரில் பெற்றது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்த ஊழியர் ஆகிய இருவரை மடக்கி பிடித்தனர். மூலப்பொருட்கள் வாங்கிய ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும், அங்கிருந்த எம்.டி.ஓ., (மினரல் தின்னர் ஆயில்) மற்றும் ஓலிக் ஆயில் (ஓலிக் ஆசிட்) அடங்கிய இரண்டு பாரல்களை பறிமுதல் செய்து, கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து செராமிக் நிறுவன உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'எம்.டி.ஓ., (மினரல் தின்னர் ஆயில்) மற்றும் ஓலிக் ஆயில் (ஓலிக் ஆசிட்) ஆகியவை பீங்கான் பொருட்கள் தயாரிப்பு பணிக்கு பயன்படுத்தக் கூடியவை. ஒரு லிட்டர் எம்.டி.ஓ.,வுக்கு 100 மி.லி., ஓலிக் ஆயில் சேர்த்து பயன்படுத்தப்படும்.

இவை, அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகளை உற்பத்தி செய்யும்போது, மோல்டுடன் (இரும்பு அச்சு) ஒட்டாத வகையில் இவ்விரு ஆயிலும் சேர்த்து பயன்படுத்தப்படும். இங்கு மெத்தனால் பயன்பாடு கிடையாது.

மேலும், மொலாசஸ், மெத்தில் டெர்மைட் வாங்குவதற்கு லைசென்ஸ் பெற வேண்டும். ஆனால், அதற்குரிய அனுமதி பெற்றுள்ளனரா என தெரியவில்லை.

கள்ளச்சாராய பலி தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us