/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொகுப்பூதிய ஊழியர்களை நீக்க நிதித்துறை கடிதம் தொகுப்பூதிய ஊழியர்களை நீக்க நிதித்துறை கடிதம்
தொகுப்பூதிய ஊழியர்களை நீக்க நிதித்துறை கடிதம்
தொகுப்பூதிய ஊழியர்களை நீக்க நிதித்துறை கடிதம்
தொகுப்பூதிய ஊழியர்களை நீக்க நிதித்துறை கடிதம்
ADDED : ஜூன் 27, 2024 03:24 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்களை, வரும் 30ம் தேதியோடு பணியில் இருந்து நீக்க, அரசின் நிதித்துறை கடிதம் அனுப்பியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், 2013ம் ஆண்டு, பல்கலைகழகத்தை அரசு ஏற்றது. நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ்தாஸ்மீனா, பல்கலை கழகத்தை சீரமைக்க உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து, சுமார் 6,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் படிப்படியாக பல்வேறு துறைகளில் அயல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், 2010ம் ஆண்டு முதல் 2012 வரை, தொகுப்பூதிய ஊழியர்களாக 171 பேர் நேரடியாகவும், 34 பேர் கருணை அடிப்படையிலும் நியமிக்கப்பட்டனர். 2 ஆண்டுகளில் அவர்களை பணி நிரந்தரம் செய்திருக்க வேணடிய நிலையில், பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றதால், அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இதனால், அவர்கள் 12 ஆண்டுகளாக ரூ. 5 ஆயிரம் முதல், ரூ. 8 ஆயிரம் சம்பளம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து வருவதுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் பணி நிரந்தரம் செய்ய சாத்தியமில்லை என, அரசு கைவிரித்து வந்தது.
தற்போது, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று, சிதம்பரம் வந்தபோது, பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அவரை சந்தித்த, தொகுப்பூதிய ஊழியர்கள், தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை மனு அளித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடமும் மனு அளித்தனர். ஆனாலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 2 ஆண்டுக்கு முன்பே, நிதித்துறை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தொகுப்பூதிய ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவு அளிக்கப்பட்டது.
அப்போது சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் சட்டசபையில் கோரிக்கை வைத்தது மட்டுமின்றி, பலரது வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு, முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தார். அதையடுத்து, மீண்டும் 6 மாதம் அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதுபோல் 5 முறை தொகுப்பூதிய ஊழியர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இதனால், எப்படியும் பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொகுப்பூதிய ஊழியர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், வரும் 30ம் தேதியோடு, பணியில் இருந்து நீக்க, அரசின் நிதித்துறை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இத்தகவல் அறிந்த தொகுப்பூதிய ஊழியர்கள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பல்கலை நிர்வாகம் பணியில் இருந்து நீக்குவதற்கு தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டை நாடலாமா அல்லது அரசிடமே மீண்டும் முறையிடலாமா என வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.