Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளிக்கான சிறப்பு பஸ் நிறுத்தம்; போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்

பள்ளிக்கான சிறப்பு பஸ் நிறுத்தம்; போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்

பள்ளிக்கான சிறப்பு பஸ் நிறுத்தம்; போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்

பள்ளிக்கான சிறப்பு பஸ் நிறுத்தம்; போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்

ADDED : ஜூலை 04, 2024 11:41 PM


Google News
விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, இருவேளை சென்று வந்த சிறப்பு பஸ் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அலட்சியத்தால் நிறுத்தப்பட்டது.

விருத்தாசலம் காந்தி நகரில், அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவிகள் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் 800க்கும் அதிகமான மாணவிகள் படிக்கின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் பள்ளி அமைந்துள்ளதால், வெளியூரில் இருந்து வரும் மாணவிகள் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பெண்ணாடம், திட்டக்குடி, ஜெயங்கொண்டம் மார்க்கமாக வரும் பஸ்களில் ஏறி வருகின்றனர்.

அதுபோல், மாலையில் வகுப்புகள் முடிந்ததும், வீட்டிற்கு செல்ல வேண்டி, பள்ளி வாசலில் நுாற்றுக்கணக்கான மாணவிகள் பஸ்சுக்கு காத்திருப்பர். அப்போது, பஸ் பாஸ் என்பதால் அரசு பஸ்கள் நிறுத்தாமல் செல்வதால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பஸ்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் முறையிட்டதன்பேரில், அப்போதைய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் முயற்சியால், காலை மற்றும் மாலை வேளையில் பஸ் நிலையத்தில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து பஸ் நிலையத்திற்கும் சிறப்பு அரசு பஸ் இயக்கப்பட்டது.

இதனால் காலை, மாலை வேளையில் மாணவிகள் சிரமமின்றி வந்து சென்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சிறப்பு பஸ் நிறுத்தப்பட்டதால், மாணவிகள் முண்டியடித்தபடி பஸ்சில் செல்ல முடியாமல் சிரமமடைகின்றனர்.

மேலும், பள்ளியில் இருந்து நல்ல மனநிலையில் வெளியேறும் மாணவிகள், பஸ்சில் இட நெருடிக்கடியில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது.

அதுபோல், ரோமியோக்கள் தொந்தரவும் அதிகம் இருப்பதால், மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, விருத்தாசலம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு சிறப்பு அரசு பஸ்சை, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீண்டும் இயக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us