Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா துவங்கியது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா துவங்கியது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா துவங்கியது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா துவங்கியது

ADDED : ஜூலை 04, 2024 03:20 AM


Google News
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இருமுறை, தரிசன விழாக்கள் நடைபெறும்.

ஆனி திருமஞ்சன தரிசன விழா, வரும் 12ம் தேதி நடக்கிறது. இவ்விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடியேற்றினார்.

விழாவில் தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 10ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது. தேரோட்டம் 11ம் தேதி நடக்கிறது.

ஆனி திருமஞ்சன தரிசன விழாவான 12ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் 6:00 வரையில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு, மகாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும்.

மாலை 3:00 மணியளவில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேதராய் நடராஜர் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சிதரும் ஆனி திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.

தீட்சிதர்கள் மனு


கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு, கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் அனுப்பியுள்ள மனு:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விழாவை சுமூகமாக நடத்துவதையும், தீட்சிதர்களின் மத செயல்பாடுகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு, சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசனம் நடைபெறும் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடராஜர் சித்சபையில் இருந்து வெளியில் வந்து விடுவதால், கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய இயலாது.

தரிசனத்திற்கு பிறகு சித்சபைக்கு எழுந்தருளிய நடராஜருக்கு விசேஷ பூஜைகள் பாரம்பரியாக நடந்து வருவதால் 10ம் தேதி முதல் 13 வரை, கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய முடியாது.

எனவே, ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்கும், பொது தீட்சிதர்ளின் பாரம்பரியமான பூஜை மற்றும் வழிபாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில், பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us