/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விபத்தில் சிக்கிய டேங்கரில் ஆசிட் கசிவு; மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் விபத்தில் சிக்கிய டேங்கரில் ஆசிட் கசிவு; மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்
விபத்தில் சிக்கிய டேங்கரில் ஆசிட் கசிவு; மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்
விபத்தில் சிக்கிய டேங்கரில் ஆசிட் கசிவு; மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்
விபத்தில் சிக்கிய டேங்கரில் ஆசிட் கசிவு; மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்
ADDED : ஜூலை 31, 2024 03:55 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேறி, பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைக்கு, புதுச்சேரியில் இருந்து 32 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. லாரியை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் ராஜதுரை ஓட்டினார்.
நள்ளிரவு 12:30 மணியளவில் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் - சேலம் சாலையில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்றபோது, டேங்கர் லாரி, சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
லாரி டிரைவர் ராஜதுரை காயமின்றி தப்பினார். விபத்தில் சிக்கிய லாரி அகற்றப்படாமல் இருந்த நிலையில், நேற்று பகல் 12:15 மணியளவில், திடீரென டேங்கர் லாரியில் இருந்து 'ஹைட்ரோ குளோரிக்' ஆசிட் கசிந்து வெளியேறியது.
இதனால், அப்பகுதி மக்களுக்கும், அவ்வழியே சென்றவர்களுக்கும் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
அச்சமடைந்த மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும், கொளஞ்சியப்பர் கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டது.
விருத்தாசலம் வனத்துறை வனகாப்பாளர் ரகுவரன் தலைமையிலான குழுவினர், கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் பராமரிக்கப்படும் 9 மான்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றினர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சுண்ணாம்பு தெளித்து ஆசிட் வீரியத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அசம்பாவிதத்தை தவிர்க்க, விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்திலிருந்து 2 கி.மீ., துாரத்திற்கு முன்னதாக பேரிகார்டு அமைத்து, கடைவீதி வழியாக சேலம் புறவழிச் சாலைக்கு, சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களை திருப்பி விட்டனர். சம்பவ பகுதியை எஸ்.பி., ராஜாராம் பார்வையிட்டார்.
பகல் 2:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து காலி டேங்கர் லாரியை வரவழைத்து, விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து ஆசிட்டை பாதுகாப்பாக மாற்றியதை தொடர்ந்து நிலைமை சீரடைந்தது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ''ஹைட்ரோ குளோரிக் அமிலம், தொழிற்சாலைகளில் கழிவுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப் படுகிறது. இதனால், பெரிய பாதிப்பு இல்லை. கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படும். அது தற்காலிகமானதே'' என்றனர்.