Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'மக்களுடன் முதல்வர்' முகாம் மனுக்களுக்கு...பலன் கிடைக்குமா? 30 நாளுக்குள் தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு

'மக்களுடன் முதல்வர்' முகாம் மனுக்களுக்கு...பலன் கிடைக்குமா? 30 நாளுக்குள் தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு

'மக்களுடன் முதல்வர்' முகாம் மனுக்களுக்கு...பலன் கிடைக்குமா? 30 நாளுக்குள் தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு

'மக்களுடன் முதல்வர்' முகாம் மனுக்களுக்கு...பலன் கிடைக்குமா? 30 நாளுக்குள் தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு

UPDATED : ஜன 05, 2024 02:07 AMADDED : ஜன 05, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
கோவை:'மக்களுடன் முதல்வர்', 'முதல்வரின் முகவரி' திட்டத்தில், கோவை மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், 50 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விதிமுறைக்கு உட்பட்டு, 30 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண, அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, கோவையில், கடந்த 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 13 அரசு துறைகளை சேர்ந்த, 52 விதமான சேவைகளை பெறுவதற்கு மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்துக்கு முன்னோட்டமாக, நவ., 22ம் தேதி கோவையில் இரு இடங்களில் முகாம் நடத்தி, மனுக்கள் பெறப்பட்டன. 15 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. வரும், 6ம் தேதி (சனிக்கிழமை) வரை முகாம் நடத்தப்படுகிறது.

போதிய ஆவணங்கள் இணைத்து விதிமுறைக்கு உட்பட்டு வழங்கும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென கறாராக உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால், பெறப்படும் மனுக்களை, 'மக்களுடன் முதல்வர்' திட்டம்; 'முதல்வரின் முகவரி' திட்டம் என இரு பிரிவாக பிரித்து, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இலவச பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு, பட்டா மாறுதல், உட்பிரிவு மாற்றுதல், இ-சேவை சான்றிதழ் கோருதல், தொழில் கடன் கோருதல் கேட்டு ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் நடத்தும் முகாம்களில், சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கேட்பது; தெருவிளக்கு அமைத்தல், மழை நீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கொடுக்கப்படுகின்றன.

இதுவரை நடத்திய முகாம்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், 28 ஆயிரம், 'முதல்வரின் முகவரி' திட்டத்தில், 22 ஆயிரம் மனுக்கள் என, மொத்தம், 50 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றின் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து வைப்பதற்காக, தற்காலிக பதில் தரக்கூடாதென, துவக்க விழாவிலேயே, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருக்கிறார். அதனால், இம்மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி அரசுத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், நடப்பாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களை தேடிச்சென்று மனுக்கள் பெற்று, தீர்வு ஏற்படுத்தாமல் ஏமாற்றினால், அரசுக்கு எதிர்மறை விளைவு ஏற்படுத்தி விடும் என்பதால், அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.

இதுதொடர்பாக, சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'மக்களுடன் முதல்வர் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதியில் மனுக்கள் குறைவாகவே வருகின்றன. பட்டா, சிட்டா நகல், வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான சேவை கேட்டு அதிகமான மனுக்கள் கொடுக்கப்படுகின்றன' என்றனர்.

'சேவை துவங்கி விட்டது'

கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''மக்களிடம் பெறப்படும் மனுக்கள், சரியான துறைக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் சென்றிருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளோம். பெயர் மாற்றம் செய்வது, மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட சேவைகள் வழங்கும் பணி துவங்கி விட்டது. அந்தந்த துறையின் தலைவர்களும், சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, மின்வாரிய சேவை கேட்டு அதிகமான மனுக்கள் வந்திருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் வாரந்தோறும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us