/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விசைத்தறியாளர் சோலார் கோரிக்கை நிறைவேறுமா? புத்தாண்டில் அறிவிப்பு எதிர்பார்ப்புவிசைத்தறியாளர் சோலார் கோரிக்கை நிறைவேறுமா? புத்தாண்டில் அறிவிப்பு எதிர்பார்ப்பு
விசைத்தறியாளர் சோலார் கோரிக்கை நிறைவேறுமா? புத்தாண்டில் அறிவிப்பு எதிர்பார்ப்பு
விசைத்தறியாளர் சோலார் கோரிக்கை நிறைவேறுமா? புத்தாண்டில் அறிவிப்பு எதிர்பார்ப்பு
விசைத்தறியாளர் சோலார் கோரிக்கை நிறைவேறுமா? புத்தாண்டில் அறிவிப்பு எதிர்பார்ப்பு
ADDED : ஜன 02, 2024 11:07 PM
சோமனுார்:''விசைத்தறிகளை நவீனப்படுத்தவும், சோலார் அமைக்கவும் மத்திய அரசு உதவி
செய்யும்,'' என்ற எதிர்பார்ப்பு விசைத்தறியாளர்களிடம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதா விசைத்தறிகள் இயக்கப் படுகின்றன. அவற்றில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் லட்சக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இரு மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்பட்டு, கிரே காடா துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தினமும் 1 கோடி மீட்டர் துணி ரகங்கள் உற்பத்தி நடக்கிறது. இதில், 80 சதவீத துணி ரகங்கள் மதிப்பு கூட்டப்பட்டு உள் நாட்டிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காததாலும், மின் கட்டண உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் முடங்கியுள்ளது.
மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு விசைத்தறி தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டங்கள் காரணமாக மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டாலும், ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்படும் நிலை உள்ளதால் விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் உயர்த்தப்படும் மின் கட்டணத்தில் இருந்து சாதா விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசிடம் கோரிக்கை
மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான விசைத்தறியாளர்கள் தவிக்கின்றனர். விசைத்தறி தொழிலை விட்டு வெளியேறுவதா அல்லது மாற்று வழியை நாடுவதா என யோசித்த வண்ணம் உள்ளனர். சோலார் மூலம் விசைத்தறிகளை இயக்க முடியும் என்பதால், அதைப்பற்றி யோசிக்க துவங்கி உள்ளனர். ஆனால், சோலார் தகடுகள் அமைத்து விசைத்தறிகளை இயக்குவதற்கு பல லட்சங்கள் செலவு ஆகும் என்பதால், தயக்கத்தில் உள்ளனர்.
மத்திய அரசு உதவினால், விசைத்தறி ஜவுளித்தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு விசைத்தறியாளர்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம் கட்டணத்தை குறைக்கவும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். தொழிலில் மந்த நிலையை காரணமாக கூறி கூலி குறைக்கப்படுகிறது.
இப்பிரச்னையில் இருந்து மீள, எங்கள் சாதா விசைத்தறிகளை நவீனப்படுத்தி ஏற்றுமதி தரம் வாய்ந்த துணி ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக விசைத்தறிகளை நவீனப்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும்.
மேலும், மின் கட்டண உயர்வில் இருந்து மீள, மாற்று வழியான சோலார் அமைப்புகளை விசைத்தறி கூடங்களில் ஏற்படுத்தவும் மத்திய அரசு உதவிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்த புத்தாண்டில் அதற்குரிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.