Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜி.டி.நாயுடுவை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்குமா தி.மு.க.,

ஜி.டி.நாயுடுவை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்குமா தி.மு.க.,

ஜி.டி.நாயுடுவை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்குமா தி.மு.க.,

ஜி.டி.நாயுடுவை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்குமா தி.மு.க.,

ADDED : ஜன 18, 2024 02:45 AM


Google News
கோவை:அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவமரியாதையாக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து கட்சி தலைமைக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு உலகம் அறிந்த அறிவியல் விஞ்ஞானி. இவரது கண்டுபிடிப்புகள் ஏராளம். 'இந்தியாவின் எடிசன்' என பெருமையாக அழைக்கப்படுபவர்.

சமீபத்தில் மாநகராட்சி நிர்வாகம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையை மேம்படுத்தியது. அப்போது 'ஜி.டி.நாயுடு தெரு' என்கிற பெயர் பலகையை புதுப்பித்து வைத்தது.

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு துணை அமைப்பாளரான ரகுநாத் என்பவர் பழைய அரசாணையை சுட்டிக்காட்டி வீதிகளில் ஜாதிப்பெயர் இருக்கக் கூடாது என கூறி 'ஜி.டி.நாயுடு தெரு' என்பதில் 'நாயுடு' என்கிற வார்த்தையை கருப்பு மை பூசி அழித்தார்.

அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கம்மவார் நாயுடு எழுச்சி பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்கை சந்தித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான முத்துசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பந்தப்பட்ட வார்டு செயலாளர் மூலமாக கருப்பு மை நீக்கப்பட்டு 'ஜி.டி.நாயுடு தெரு' என மீண்டும் தெரியும் வகையில் சுத்தம் செய்யப்பட்டது.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்ட ரகுநாத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. தலைமைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் கடிதம் எழுதியுள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படுமா என கோவையை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us