/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காட்டுப் பன்றிகளை இப்படியும் கட்டுப்படுத்தலாம்: முன்னோடி விவசாயிகள் அறிவுரைகாட்டுப் பன்றிகளை இப்படியும் கட்டுப்படுத்தலாம்: முன்னோடி விவசாயிகள் அறிவுரை
காட்டுப் பன்றிகளை இப்படியும் கட்டுப்படுத்தலாம்: முன்னோடி விவசாயிகள் அறிவுரை
காட்டுப் பன்றிகளை இப்படியும் கட்டுப்படுத்தலாம்: முன்னோடி விவசாயிகள் அறிவுரை
காட்டுப் பன்றிகளை இப்படியும் கட்டுப்படுத்தலாம்: முன்னோடி விவசாயிகள் அறிவுரை
ADDED : ஜன 28, 2024 11:19 PM
பெ.நா.பாளையம்:வேளாண் பயிர்களை அழிக்கும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த, தோட்டங்களில் இருந்து விரட்ட, பல்வேறு யோசனைகளை முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டு பன்றிகள், வேர்கள், கிழங்குகள், பூச்சிகள், பாம்புகள், சிறு விலங்குகள் என அனைத்தையும் உண்ணும். பொதுவாக, 15 முதல், 35 காட்டுப்பன்றிகள் குழுவாக பயிர்களை நாசம் செய்கின்றன.
காட்டில் இருக்கும் உணவை விட, நெல், சோளம், மக்காசோளம், பயிர் வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை அவற்றுக்கு சிறந்த உணவாக இருப்பதால், அவற்றை நாடி மலையோர கிராமங்களை முற்றுகையிடுகின்றன.
காட்டு பன்றிகள் உண்பதை விட, அதிக அளவில் சேதம் விளைவிக்கிறது. காட்டுப்பன்றிகள் ஆண்டு முழுவதும், இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பட்டியலில் காட்டு பன்றிகள் இருப்பதால், அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தவும், அவற்றை வேளாண் நிலங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்க, எளிய வழிமுறைகளை முன்னோடி விவசாயிகள் அறிவுரையாக வழங்கியுள்ளனர்.
நிலத்திலிருந்து மூன்று அடி உயரம் வரை கம்பி வலை வேலி அமைத்து காட்டுப் பன்றிகள் தோட்டத்துக்குள் புகுவதை தடுக்கலாம். விலை உயர்ந்த பயிராக இருந்தால், வயலைச் சுற்றிலும், சூரிய மின்வெளி அமைக்கலாம். அதில் குறைந்த அளவு மின்சார அதிர்ச்சி ஏற்படுத்தும் போது, பன்றிகள் அங்கிருந்து விலகி ஓடிவிடும்.
பயிர்களின் எல்லை பரப்பில் விவசாய நிலத்தில் இரண்டு அடி அகலமும், ஒன்றரை அடி ஆழமும் கொண்ட கால்வாய் அமைக்கலாம். காட்டுப்பன்றிக்கு கால்கள் குட்டையாக இருப்பதால், இதைத் தாண்டி காட்டு பன்றிகளால் வர இயலாது.
வரப்பினை சுற்றிலும், 4 வரிசையில் ஆமணக்கு பயிரிடலாம். ஆமணக்கு பயிரின் வாசம், வயலில் உள்ள மற்ற பயிரின் வாசத்தினை மறைத்து விடும். ஆமணக்கில் அதிக அளவு 'அல்கலாய்டுகள்' இருப்பதால், அவை சுவையாக இல்லாததினால், காட்டுப்பன்றிக்கு பிடிக்காது.
சணல் கயிறு அல்லது பருத்தி துணி பட்டையை கெரோசினில் ஊறவைத்து, வயலைச் சுற்றி ஒரு அடி உயரத்திற்கு ஒன்று என்ற அளவில் மூன்று வரிசையாக கட்டும் போது, கெரோசின் எண்ணையின் வாசம், பயிர்வாசத்தினை மறைக்கும். இதனாலும் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தலாம்.
உள்ளூர் பன்றிகளின் கழிவுகளை கரைத்து, ஒரு அடி அகலத்துக்கு வயலை சுற்றி தெளித்தால், காட்டு பன்றிகள், இன்னொரு பன்றியின் எல்லைக்குள் வந்ததாக கருதி, அந்த இடத்தை விட்டு அகலும். இதை ஏழு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
காட்டு பன்றிகள் மூக்கின் வாயிலாக நுகர்ந்து சென்று, பயிர்களையும், வழிதடத்தினையும் கண்டுபிடிக்கிறது. எனவே, வயலைச் சுற்றி, முடி திருத்தத்தில் கிடைக்கும் மனித தலை முடியினை பரப்புவதன் வாயிலாக, பன்றிகள் நுகரும்போது, முடி மூச்சு குழாய்க்குள் சிக்கி விடுவதால், அவை மீண்டும் அந்த பகுதிக்கு வருவதில்லை.
பழைய வண்ண, வண்ண சேலைகளை வயலை சுற்றி கட்டுவதன் வாயிலாக, மனித நடமாட்டம் இருப்பதாக கருதி காட்டுப்பன்றிகள் வருவதில்லை. சில விவசாயிகள் நாய்களை வைத்து, காட்டுப் பன்றிகளை விரட்டுவதும் உண்டு. மேற்கண்ட வழிமுறைகளை பன்றிகளின் உயிருக்கு சேதம் ஏற்படுத்தாமல், விவசாயிகள் மேற்கொண்டு, தங்கள் வேளாண் பயிர்களை காப்பாற்றலாம் என, முன்னோடி விவசாயிகள் ஆலோசனை கூறினர்.