Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தண்ணி தொட்டி தேடி வரும் வன விலங்குகள்! தாகம் தணிக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

தண்ணி தொட்டி தேடி வரும் வன விலங்குகள்! தாகம் தணிக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

தண்ணி தொட்டி தேடி வரும் வன விலங்குகள்! தாகம் தணிக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

தண்ணி தொட்டி தேடி வரும் வன விலங்குகள்! தாகம் தணிக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை

ADDED : பிப் 09, 2024 09:17 PM


Google News
பெ.நா.பாளையம்:'கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதிகளில், வனவிலங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், போதியளவு தண்ணீரை நிரப்பி வைக்க, வனத்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 7 வனச்சரகங்களில், 62 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.

இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. பருவமழை காலங்களில் வனப்பகுதி பசுமையாக காணப்படும். வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், குளங்கள், சிற்றோடைகளில் தண்ணீர் நிறைந்து இருக்கும்.

தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், போதிய மழை இல்லாததால், வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள், குளங்கள், சிற்றோடைகள் ஆகியவை நீரின்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோடைகாலங்களில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக, விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதை தடுக்க, வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலையோர கிராமங்களில் தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் கட்டி வைத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் போதிய பராமரிப்பு இல்லாததால், அவை பாசி படிந்து, குப்பைகள் மண்டி கிடைக்கின்றன. பல தொட்டிகள் இடிந்துள்ளன. இதனால் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாத சூழல் உள்ளது.

இதுகுறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது:

கோடைக்காலங்களில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை வனப்பகுதிக்குள்ளேயே தீர்த்து வைக்க, வனத்துறையினர் வனத்தை ஒட்டிய மலையோர கிராமங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்தனர்.

பல இடங்களில் அவை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதை உரிய காலத்தில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளாததால், பல வன விலங்குகள் கோடை காலத்தில் போதிய தண்ணீர் இன்றி பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண, கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு வனச்சரகங்களில் உள்ள, 62 வனவிலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளை உடனடியாக பராமரித்து, சரிப்படுத்தி, தண்ணீர் நிரப்ப செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், தண்ணீரின் துாய்மை தன்மையை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட மூலிகை கட்டிகளை தொட்டிகளுக்கு அருகே வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நடவடிக்கை


வனத்துறையினர் கூறுகையில், 'கோடைகாலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்காக வனத்தில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளதால், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டிகளில், 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொட்டிகள் சிறிய மற்றும் பெரிய விலங்குகள் நீர் அருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த தண்ணீர் தொட்டிகளை விரைந்து செப்பனிட்டு, வன விலங்குகள் தண்ணீர் அருந்த ஏதுவாக மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us