/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'மாடர்ன் சிட்டி'யாக மாற்றுவதாக சொன்னவர்கள் எங்கே? 30வது வார்டில் பிரச்னைகள் ஏராளம்'மாடர்ன் சிட்டி'யாக மாற்றுவதாக சொன்னவர்கள் எங்கே? 30வது வார்டில் பிரச்னைகள் ஏராளம்
'மாடர்ன் சிட்டி'யாக மாற்றுவதாக சொன்னவர்கள் எங்கே? 30வது வார்டில் பிரச்னைகள் ஏராளம்
'மாடர்ன் சிட்டி'யாக மாற்றுவதாக சொன்னவர்கள் எங்கே? 30வது வார்டில் பிரச்னைகள் ஏராளம்
'மாடர்ன் சிட்டி'யாக மாற்றுவதாக சொன்னவர்கள் எங்கே? 30வது வார்டில் பிரச்னைகள் ஏராளம்
ADDED : ஜன 24, 2024 09:16 PM

பொள்ளாச்சி நகராட்சி, 30வது வார்டில், திருநீலகண்டர் வீதி, கலைவாணர் வீதி, மதுரைவீரன் கோவில் வீதி, அன்னை கஸ்துாரிபாய் வீதி, தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பகுதிகளில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவு வசிக்கும் இந்த வார்டில், அடுக்கடுக்கான பிரச்னைகள் உள்ளன. எனினும் அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை என குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்பு பகுதி மக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் கிடப்பதுடன், புதர்கள் மண்டி காணப்படுகிறது.
திருநீலகண்டர் வீதியில், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி அருகே இணைப்புக்காக தோண்டப்பட்ட இடம் சரியாக சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
சுகாதாரமில்லை
பழனியப்பன் வீதியில் சிறுபாலங்கள் கட்டப்படாமல் உள்ளதால், சாக்கடை கால்வாய் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் துாங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றோம்.
குப்பை அள்ளுதல், சாக்கடை கால்வாய் துார்வாருவதற்கு அதிகளவு துாய்மை பணியாளர்கள் இருந்தனர். தற்போது, இரண்டு பேர் தான் பணிக்கு வருகின்றனர். குப்பை அள்ளுபவர்கள், சாக்கடை துார்வாருவதில்லை. தனித்தனி ஆட்கள் இருப்பதாக கூறினாலும், எந்த பணியும் முழு அளவில் நடைபெறவில்லை.
இதனால், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஓட்டுநர்கள் அவதி
கலைவாணர் வீதியில் தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள்அவதிப்படுகின்றனர்.
அன்னை கஸ்துாரிபாய் வீதியில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு ரோடு அமைக்கப்பட்டது. தற்போது, அந்த கற்கள் பெயர்ந்தும், உள்வாங்கி கிடப்பதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், தெருவிளக்குகள் முறையாக எரியாமல் இரவு நேரங்களில் இருளாகவே வீதிகள் உள்ளன. தெருவிளக்கு சீரமைக்க கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை.
தீராத பிரச்னை
குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்தது. அதன்பின், மூன்று நாட்கள் ஒரு முறை வழங்கப்பட்டது. தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும், ஒன்றரை மணி நேரம் மட்டுமே வருவதால் பற்றாக்குறையாக உள்ளது.
நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகளான நிலையில், அடிப்படை பிரச்னைகளுக்கு கூட முறையாக தீர்வு காணப்படாமல் உள்ளது. வார்டில் ஆளுங்கட்சியை சேர்ந்தவரே கவுன்சிலராக வெற்றி பெற்றார். ஆனாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஓட்டு கேட்க வந்த போது, 'மாடர்ன் சிட்டி' ஆக மாற்றுவதாக கூறினர். ஆனால், சுகாதாரம் என்ன விலை என கேட்கும் நிலை தான் உள்ளது. அதிகாரிகள், கவனம் செலுத்தி இந்த வார்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.