Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை எப்ப கிடைக்கும்! ஒரு மாதம் கடந்தும் வழங்காததால் அதிருப்தி

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை எப்ப கிடைக்கும்! ஒரு மாதம் கடந்தும் வழங்காததால் அதிருப்தி

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை எப்ப கிடைக்கும்! ஒரு மாதம் கடந்தும் வழங்காததால் அதிருப்தி

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை எப்ப கிடைக்கும்! ஒரு மாதம் கடந்தும் வழங்காததால் அதிருப்தி

ADDED : ஜூலை 17, 2024 08:45 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை, பள்ளி திறந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் வழங்கவில்லை. இதனால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பை, காலணி, சீருடை மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டு, கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், சீருடை வழங்கப்படவில்லை.

கடந்த மாதம் இறுதி வரை, 'கலர் டிரஸ்' அணிய மாணவ, மாணவியருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இலவச சீருடை வழங்காததால், மாணவ, மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாணவ, மாணவியர் சிலர், கடந்த ஆண்டு பயன்படுத்திய சீருடைகளையே அணிந்து வருகின்றனர். அதேநேரம், பலருக்கு அவர்களின் வளர்ச்சி காரணமாக, சீருடைகளைப் பயன்படுத்த முடிவதில்லை.

இந்நிலையில், சில பெற்றோர்கள் தங்களது செலவில் சீருடைகளை வாங்கி வருகின்றனர். இது குறித்து, பெற்றோர்கள், அவ்வப்போது, கேள்வி எழுப்பி வருவதால், ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. அவ்வகையில், பள்ளி திறக்கும் நாளில் இரண்டு ஜோடி சீருடை, காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் போது, மேலும் இரண்டு ஜோடி சீருடை வழங்கப்படும்.

அதன்படி, சீருடை தைப்பதற்கு முன், ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் அளவு தனித்தனியாக கணக்கீடு செய்யப்பட்டது. 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'சர்ட்' மற்றும் -'பேன்ட்', 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசர் மற்றும் -'சர்ட்' வழங்கப்படுகிறது.

மாணவியரை பொறுத்த வரை, 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஸ்கர்ட் மற்றும் சர்ட்; 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாவாடை- மற்றும் சர்ட், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு கோட்டுடன் சுடிதார் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டு, பள்ளி திறந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் புதிய சீருடை வழங்கப்படவில்லை. இதனால், 'கலர் டிரஸ்' பயன்பாட்டிற்கு, காலவரையின்றி அவகாசம் வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீருடை வழங்கப்பட்டால், அனைவரும் ஒரே மாதிரி அணிந்து வருவர்.

இவ்வாறு, கூறினர்.

பள்ளி பெயர் இடம்பெறணும்!

கல்வியாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும், வழங்கப்படும் சீருடையில் பள்ளியின் பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளை போன்று, அந்தந்த அரசு பள்ளிக்கான சின்னத்துடன், எம்பிராய்டரி மெஷின் வாயிலாக பள்ளியின் பெயரை தைத்து விட வேண்டும்.அப்போது, பொதுஇடத்தில் ஏதேனும் ஒரு பிரச்னையில் மாணவர்கள் சிக்கி இருந்தால், எளிதில் அடையாளம் கண்டு, பள்ளிக்கு தகவல் தெரிவிக்கலாம். இதேபோன்று, அடாவடியில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து, நல்வழிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்ட அளவில், துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும், என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us