Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு

உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு

உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு

உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு

UPDATED : ஜூலை 03, 2025 09:48 PMADDED : ஜூலை 03, 2025 09:40 PM


Google News
Latest Tamil News
கோவை; கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கு வீடு வீடாகச் சென்ற தி.மு.க.,வினரிடம், 'உரிமைத்தொகை என்னாச்சு; ரெண்டு தடவை விண்ணப்பித்து விட்டேன்; இன்னும் கொடுக்கலைங்க' என, பெண்கள் நேருக்கு நேராகவே கேள்வி எழுப்பினர்.

கோவை மாவட்டத்தில், 10 லட்சம் வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க, தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் மூலம் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணி நேற்று துவக்கப்பட்டது. பகுதி செயலர்கள், வார்டு செயலர்கள் தலைமையில் கட்சியினர் சென்றனர். முதலில், கட்சியினர் வீட்டுக்குச் சென்று, அவர்களது குடும்பத்தினரை உறுப்பினர்களாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுடன் செல்லும் 'டிஜிட்டல் பூத் ஏஜன்ட்', உறுப்பினர்களாக இணைவோர் சொல்லும் கருத்துக்களை, ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துள்ள செயலியில் பதிவேற்றம் செய்தனர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அச்செயலியை பயன்படுத்தியதால், திணறியது. அதனால், படிவத்திலும் அவர்களது பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் போன் எண் எழுதி, கையெழுத்து பெற்றனர்.

அலைய வைக்கும் அதிகாரிகள்


சுந்தரம் வீதியை சேர்ந்த ஈஸ்வரி கூறும்போது, ''அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், காத்திருக்க வைக்கின்றனர். அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு ஊழியர்கள் வருவதில்லை. ரேஷன் கடையாக இருக்கட்டும்; வி.ஏ.ஓ., அலுவலகமாக இருக்கட்டும்; எங்கு சென்றாலும் அலைய வைக்கின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தப்படுத்திக் கொடுங்கள்,'' என்றார்.

எங்க தொழிலேமுடங்கிப்போச்சு!


மண்பாண்டம் தயாரிக்கும் பாலகிருஷ்ணன், ''சுந்தரம் வீதியில் இதற்கு முன் சூளை இருந்தது. மண் பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தோம். இதை நம்பி, 500 குடும்பங்கள் இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, சூளை இடிக்கப்பட்டு விட்டது. குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து வந்து, வீட்டிலேயே விநாயகர் சிலை, தீபங்கள் தயாரிக்கிறோம். சூளை அமைக்க, 30 சென்ட் இடம் ஒதுக்கித் தர வேண்டும். பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். எங்கள் தொழிலே முடங்கியிருக்கிறது,'' என, முறையிட்டார்.

'மீண்டும், மீண்டும்விண்ணப்பித்தேன்'


அப்பகுதியை சேர்ந்த இன்னொரு பெண், 'மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தேன்; வரவில்லை. மீண்டும் விண்ணப்பித்தேன்; இன்னும் கொடுக்கவில்லை' என முறையிட்டார்.

இதேபோல், பீளமேடு அண்ணா நகரை சேர்ந்த சாவித்ரி என்பவரும், ''கடந்த இரு ஆண்டுகளாக, மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து வருகிறேன். இரண்டு முறையும் கிடைக்கவில்லை. இத்திட்டத்தின் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற கட்சியினரிடம், 'உரிமைத்தொகை கிடைக்கவில்லை' என்கிற புகாரை வெளிப்படையாகவே பெண்கள் நேருக்கு நேராக தெரிவித்தனர்.

ரோடு எல்லாம்குண்டு, குழி


பீளமேடு பகுதியை சேர்ந்த இன்னொரு பெண் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கச் சொல்லுங்கள். ரோடெல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது; வாகனங்களில் செல்ல முடியவில்லை' என புலம்பினார்.

காந்திபுரம் பகுதியில் கட்சியினர் சென்றபோது, வணிக பகுதியில் சொத்து வரி அதிகமாக உயர்ந்திருப்பதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் ஒரு நோட்டில் தி.மு.க.,வினர் பதிவு செய்தனர். 'அடுத்த முகாம் நடைபெறும்போது, மகளிர் உரிமைத்தொகை வழங்க பரிந்துரை செய்வதாக, பெண்களிடம் கூறி, சமாளித்தனர். மகளிர் உரிமைத்தொகை கேட்பவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை சேகரித்தனர். வீட்டுக்கு முன், ஓரணியில் திரள்வோம் என்கிற ஸ்டிக்கர் ஒட்டினர்.

ஆறு கேள்விகள்


ஒவ்வொரு வீடாக சென்று, 10 நிமிடம் பேசுகிறோம். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் யாராவது பயன் அடைகிறார்களா என்பது உள்ளிட்ட ஆறு கேள்விகள் கேட்கிறோம். முதலில், கட்சிக்காரர்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகிறோம். படிப்படியாக மற்றவர்களையும் சந்திப்போம். இப்பணியை கட்சியினர் சரியாக செய்தால், மக்களின் மனநிலையை தெளிவாக அறியலாம்; ஆட்சியை எடை போடலாம். மக்கள் சொல்லும் கோரிக்கைகளை தனியாக எழுதி, மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்போம்' என்றனர்.

- தி.மு.க., நிர்வாகிகள்

தி.மு.க.,வினர் சால்ஜாப்பு@


அன்னூர் பேரூராட்சி இரண்டாவது வார்டில், சத்தி ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு தி.மு.க.,வினர் சென்று, அல்லிகுளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் உறுப்பினராக சேரும்படி கூறினர்.
அப்போது அவர், ''மகளிர் உரிமைத்தொகை பெற எங்கள் குடும்பம் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆன்லைன் வாயிலாக மனு அளித்தும் பயனில்லை,'' என்றார்.
அவரது புகாரால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., நிர்வாகிகள், 'இன்னும் இரு வாரத்தில் இதற்கான சிறப்பு முகாம் துவங்க உள்ளது' என சமாதானம் சொல்லியபடி, அங்கிருந்து நடையை கட்டினர்.@







      Our Apps Available On




      Dinamalar

      Follow us