/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளியங்கிரி மலையில் தன்னார்வலர்கள் துாய்மை பணி வெள்ளியங்கிரி மலையில் தன்னார்வலர்கள் துாய்மை பணி
வெள்ளியங்கிரி மலையில் தன்னார்வலர்கள் துாய்மை பணி
வெள்ளியங்கிரி மலையில் தன்னார்வலர்கள் துாய்மை பணி
வெள்ளியங்கிரி மலையில் தன்னார்வலர்கள் துாய்மை பணி
ADDED : ஜூன் 09, 2025 10:50 PM

தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையின், ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை வழிபட, கடந்த பிப்ரவரி முதல் மே 25ம் தேதி வரை, பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர்.
இதில், சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆண்டு மலையேறி ஈசனை வழிபட்டனர். தற்போது, பக்தர்கள், வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதிக் காலம் முடிவுற்ற நிலையில், ஏராளமான பிளாஸ்டிக் குப்பை வனப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஹரிகுமார் என்பவர், இந்தாண்டு, 102 முறை வெள்ளியங்கிரி மலை ஏறி சாதனை படைத்திருந்தார்.
இவர், தனது சமூக வலைத்தள பக்கம் மூலம் வெள்ளியங்கிரி மலையில், தூய்மை பணி மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 35க்கும் மேற்பட்டோர் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்திருந்தனர். அனைவரும் ஒருங்கிணைந்து, வெள்ளியங்கிரி மலைத்தொடரில், முதல் மூன்று மலைகளில் இருந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், குப்பையை சேகரித்து, அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
சேகரிக்கப்பட்ட 36 மூட்டை பிளாஸ்டிக்கை, கோவை மாநகராட்சியில் ஒப்படைத்தனர்.
இக்குழுவினர், இன்னும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், வெள்ளியங்கிரி மலையில், தூய்மை பணி மேற்கொள்ள உள்ளனர்.