Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாய்க்காலில் மண் அடைப்பை அகற்றுங்கள்! 'குளிரட்டும்' கிருஷ்ணாம்பதி!

வாய்க்காலில் மண் அடைப்பை அகற்றுங்கள்! 'குளிரட்டும்' கிருஷ்ணாம்பதி!

வாய்க்காலில் மண் அடைப்பை அகற்றுங்கள்! 'குளிரட்டும்' கிருஷ்ணாம்பதி!

வாய்க்காலில் மண் அடைப்பை அகற்றுங்கள்! 'குளிரட்டும்' கிருஷ்ணாம்பதி!

ADDED : ஜூலை 19, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
கோவை;கோவை மாநகராட்சி வசமுள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் மற்றும் செல்வ சிந்தாமணி குளங்களுக்கு, நொய்யல் ஆற்று தண்ணீரை கொண்டு வர, பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.

மாநகராட்சி பராமரிப்பில் ஒன்பது குளங்கள் உள்ளன. இதில், குறிச்சி குளத்துக்கு கோயமுத்துார் அணைக்கட்டு வழியாக தண்ணீர் செல்கிறது. உக்கடம் பெரிய குளத்துக்கு செல்வ சிந்தாமணி குளத்தின் உபரி நீர் மற்றும் சேத்துமா வாய்க்கால் வழியாக நொய்யல் ஆற்றுத்தண்ணீர் வர வேண்டும்.

ஆண்டிபாளையம் பிரிவு மதகு போதியளவு திறக்கப்படாததாலும், வாய்க்காலில் ஆகாயத் தாமரை படர்ந்து புதர்மண்டி இருந்ததாலும், நொய்யல் ஆற்றுத்தண்ணீர் உக்கடம் பெரிய குளத்துக்கு வராமல் இருந்தது.

இது குறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதும், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, மதகுகளை இரண்டு இன்ச் கூடுதலாக திறந்து, தண்ணீர் வர ஏற்பாடு செய்தனர்.

சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து, வழங்கு வாய்க்கால் வழியாக திருப்பி விடப்படும் தண்ணீர், கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வர வேண்டும். கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் மற்றும் செல்வசிந்தாமணி குளங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன.

நாகராஜபுரத்தில் வாய்க்காலின் குறுக்கே பாலம் அகலப்படுத்தும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். இதற்காக, வாய்க்கால் குறுக்கே மண்ணை கொட்டி, நீர் வரத்தை தடுத்திருக்கின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சி வசமுள்ள குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை.

இதையறிந்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், 'பாலம் கட்டும் பணியை பிறகு செய்து கொள்ளலாம்; இப்போதைக்கு ஆற்றில் செல்லும் தண்ணீரை குளத்துக்கு திருப்பி விடுங்கள். வாய்க்கால் குறுக்கே கொட்டியுள்ள மண்ணை அகற்றுங்கள்' என, நெடுஞ்சாலைத்துறையினரிடம் கூறியும், அவர்கள் கேட்கவில்லை.

அவசர அவசரமாக கம்பி கட்டி, கான்கிரீட் கலவை ஊற்றுவதற்கான பணியை, நேற்று மேற்கொண்டனர்.

பருவ மழை துவங்குவதற்கு முன் செய்ய வேண்டிய வேலையை, ஆற்றில் தண்ணீர் வரும்போது குளங்களில் தேக்கவிடாமல், வாய்க்கால் குறுக்கே மண்ணை கொட்டி, அடைப்பு ஏற்படுத்தி, வேலை செய்ததால், அதிருப்தி ஏற்பட்டது.

இத்தகவலை, கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றனர். நேற்றைய நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, 'கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் மற்றும் செல்வ சிந்தாமணி குளங்களுக்கு நொய்யல் ஆற்றுத்தண்ணீர் கொண்டு வருவதற்கான பணியை செய்யுங்கள்; நாகராஜபுரத்தில் உள்ள அடைப்பை நீக்கி, வாய்க்காலில் தண்ணீரை அனுப்புங்கள்' என, பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு, வாய்க்கால் குறுக்கே இருந்த மண் குவியல் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பாலம் கட்டுமான பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர்.

வாய்க்காலில் செல்லும் தண்ணீரால், கான்கிரீட் தளம் பாதிக்காது என கூறியதால், குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான பணிகளை, பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us