/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும்... 100 பேருக்கு சீட்! வருகிறது ஒரு ஏ.சி., பெட்டி இணைப்பு!உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும்... 100 பேருக்கு சீட்! வருகிறது ஒரு ஏ.சி., பெட்டி இணைப்பு!
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும்... 100 பேருக்கு சீட்! வருகிறது ஒரு ஏ.சி., பெட்டி இணைப்பு!
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும்... 100 பேருக்கு சீட்! வருகிறது ஒரு ஏ.சி., பெட்டி இணைப்பு!
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும்... 100 பேருக்கு சீட்! வருகிறது ஒரு ஏ.சி., பெட்டி இணைப்பு!
UPDATED : ஜன 10, 2024 01:56 AM
ADDED : ஜன 10, 2024 12:30 AM

-நமது நிருபர்-
கோவை-பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படுவதால், மேலும் 100 பேருக்கு இருக்கை கிடைக்கவுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது ஏழு 'டபுள் டெக்கர்' ஏ.சி., ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவற்றில் இரண்டு ரயில்கள் இயக்கத்தைக் கொண்ட நகரமாக, பெங்களூரு பெருமை பெற்றுள்ளது.
ஒன்று, கோவையிலிருந்தும், மற்றொன்று சென்னையிலிருந்தும் பெங்களூருக்கு இயக்கப்படுகின்றன. இரு ரயில்களும், காலையில் பயணத்தைத் துவக்கி, மதியம் பெங்களூரு சென்றடைகின்றன.
ஏ.சி., பரவலாக இருக்காது; கால் நீட்டுவது சிரமம்; சிலருக்கு தலை முட்டும் என பல பிரச்னைகள் இருப்பதால், இந்த வகையான ரயில்களுக்கு, பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை.
அதனால் 'டபுள் டெக்கர்' ரயில்களைத் தயாரிப்பதையே, இந்திய ரயில்வே நிறுத்தி விட்டது. இருப்பினும், கோவையில் இந்த ரயிலுக்கு இப்போது வரையிலும் அதிகத்தேவையும், வரவேற்பும் உள்ளது.
கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் வழியாக, பெங்களூரு கே.எஸ்.ஆர்., ஸ்டேஷன் செல்வதால், ஏராளமான மக்கள் பயன் பெறுகின்றனர். தற்போது இந்த ரயிலில், ஏழு ஏ.சி., வகுப்பு சேர் கார் பெட்டிகள் உள்ளன.
வரும் பிப்.,15 முதல், இதில் கூடுதலாக ஒரு ஏ.சி., வகுப்புப் பெட்டி இணைக்கப்படவுள்ளது; இதனால் மேலும் 100 ஏ.சி., சேர் கார் டிக்கெட்கள், கூடுதலாகக் கிடைக்கும். இதுவரை 14 ஆக இருந்த ஏ.சி., சேர் கார் பெட்டிகளின் எண்ணிக்கை, 15 ஆக உயர்கிறது.
இந்த ரயிலுக்கும், சென்னை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் இடையே, 'ரேக் ஷேரிங் அரேஞ்ச்மென்ட்' எனப்படும் ரயில் பெட்டிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதனால், இங்கிருந்து பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும்; சென்னையிலிருந்து பெங்களூரு வரும் ரயில், கோவை வரும்.
பெங்களூரு செல்லும் இந்த ரயிலில் ஏ.சி., சேர் கார் கட்டணம், ரூ. 625 மட்டுமே. இந்த ரயிலில் இப்போது ஏ.சி., சேர் கார்களின் எண்ணிக்கை, 900 ஆக உயர்ந்துள்ளதால், ரூ.1025 மற்றும் ரூ.1930 செலுத்தி, வந்தே பாரத் ரயிலில் செல்வோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதைக் காரணமாக வைத்து, வந்தே பாரத் ரயில் கேரளாவுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இதற்குப் பதிலாக, பெங்களூருக்கு கூடுதலாக இரவு நேர ரயில் இயக்க வேண்டும் அல்லது உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடுதலாக இரண்டு சாதாரண வகுப்புப் பெட்டிகளை இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையும், சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளது.


