Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனை புதிய கட்டடங்கள் திறப்பு மக்களை காக்க...! ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் அர்ப்பணிப்பு

அரசு மருத்துவமனை புதிய கட்டடங்கள் திறப்பு மக்களை காக்க...! ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் அர்ப்பணிப்பு

அரசு மருத்துவமனை புதிய கட்டடங்கள் திறப்பு மக்களை காக்க...! ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் அர்ப்பணிப்பு

அரசு மருத்துவமனை புதிய கட்டடங்கள் திறப்பு மக்களை காக்க...! ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் அர்ப்பணிப்பு

ADDED : பிப் 09, 2024 11:42 PM


Google News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு முதல் தளத்தில், ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை இணைக்கும் வகையில், கட்டடம் மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் பயன்பாட்டுக்கு வந்தது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரம், வால்பாறை பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த, 2017ம் ஆண்டு, 16 படுக்கைகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டது.

இப்பிரிவில் இதுவரை, 20,572 விபத்து மற்றும் காய சிகிச்சை, 2,606 மாரடைப்பு, 1,266 பக்கவாதம், 2,242 குழந்தைகள் அவசர சிகிச்சை, 258 தீக்காயம், 4,573 விஷமுறிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்பிரிவை விரிவுப்படுத்தி நோயாளிகள் பயன் பெறும் வகையில், உயிரிழப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு முதல் தளத்தில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை இணைக்கும் வகையில், இணைப்பு சாய்தளத்துடன் கூடிய கட்டடம், 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய சுகாதார திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டது. தற்போது, இந்த கட்டடத்தில், 15 படுக்கை வசதிகள் மற்றும் உபகரண வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பரிசோதனை கூடம்


அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆய்வகத்தில், கடந்த, மூன்றாண்டுகளில், 5 லட்சத்து, 65 ஆயிரத்து, 980 உயிர் வேதியியல், 15,081 நுண்ணுயிரியல், 14 லட்சத்து 99 ஆயிரத்து 410 மருத்துவ நோயியல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இப்பிரிவை மேலும் விரிவுப்படுத்தும் வகையில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ், 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பரிசோதனை ஆய்வு கூடம், உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், கட்டடத்தை திறந்து வைத்தார். இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், இணை இயக்குனர் ராஜசேகரன், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, எம்.பி., சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவமனை தொடர்ந்து தேசிய தரச்சான்று பெற்றதற்காக, செவிலியர்கள், டாக்டர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாமில், அமைச்சர்கள் சுப்ரமணியன், முத்துசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேம்படுத்தப்படும்


அமைச்சர் கூறியதாவது:

அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு தேவையான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

மருத்துவ காப்பீடு திட்டத்தில், கோவை திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 37,173 பேருக்கு காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வந்தார், அவசரமாக சென்றார்!

சுகாதாரத்துறை அமைச்சர் வருகைக்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் பேசுவதற்காக மேடை அமைத்து, ேஷாபாக்கள் போடப்பட்டு இருந்தன.மதியம், 12:00 மணிக்கு விழா துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர், மதியம், 1:20 மணிக்கு வந்தார். கட்டடத்தை திறந்து வைத்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்ததும் அவசர அவசரமாக கிளம்பினார்.அமைச்சர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் அவசரமாக சென்றார். இதனால், விழா சில நிமிடங்களில் நிறைவு பெற்றது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us