Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துாங்குது வாரியம்... தொட்டால் 'காரியம்!' காவு வாங்க காத்திருக்கும் 'கரன்ட்' கம்பங்கள்

துாங்குது வாரியம்... தொட்டால் 'காரியம்!' காவு வாங்க காத்திருக்கும் 'கரன்ட்' கம்பங்கள்

துாங்குது வாரியம்... தொட்டால் 'காரியம்!' காவு வாங்க காத்திருக்கும் 'கரன்ட்' கம்பங்கள்

துாங்குது வாரியம்... தொட்டால் 'காரியம்!' காவு வாங்க காத்திருக்கும் 'கரன்ட்' கம்பங்கள்

ADDED : ஜூன் 25, 2025 09:07 PM


Google News
Latest Tamil News
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொள்ளாச்சி கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன.

இதற்காக, 2,759 டிரான்ஸ்பார்மர், மின்கம்பிகள் மற்றும் மின்சாதனங்களை தாங்குவதற்கு ஏதுவாக, தாழ்வழுத்த மின்பாதையில் 79,014 கம்பங்கள், உயரழுத்த மின்பதையில், 23,774 கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் வினியோகத்தில் சீரான தன்மையை பராமரிக்கவும், மின் விபத்துகளை தவிர்த்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும்.

ஆனால், பல கம்பங்களில், குறிப்பிட்ட நாள் இடைவெளியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலை ஏற்படுகிறது. கனமழையின் போதும், பலத்த காற்று வீசும்போதும் கீழே விழுந்து, ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இதேபோல, கம்பங்களில் கொடி படர்ந்தும் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

கிராமப்புறங்களில், பல இடங்களில் சேதமடைந்த மின்கம்பங்களை காண முடிகிறது. அதிலும், கோமங்கலம்புதுார், அந்தியூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஆபத்தான நிலையில், சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள் அதிகம் உள்ளன.

மின் வினியோகத்தில் சீரான தன்மையை பராமரிக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், மரக்கிளைகளுக்குள் சிக்கியிருக்கும் மின்வழித்தடத்தை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.

* கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில் உள்ள கிராமப்பகுதிகளில் கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்த மின்கம்பங்கள் உபயோகத்தில் உள்ளன.

கிணத்துக்கடவு, பெரியார் நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் அதிகம் சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாயும் நிலையில் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால், சேதமடைந்த மின்கம்பங்களை விரைவில் மாற்றம் செய்ய வேண்டும்.

செட்டியக்காபாளையம் - பட்டணம் செல்லும் ரோட்டில் புதிய மின் கம்பம் நடப்பட்டாலும், மேல் பகுதி சேதமடைந்த பழைய மின்கம்பத்தில் ஒயர்கள் உள்ளதால், விரைவில் மாற்றம் செய்ய வேண்டும்.

நெகமம் - - வடசித்தூர் ரோட்டின் ஓரத்தில் குப்பை போன்று மின்கம்பம் போடப்பட்டுள்ளது. இவற்றை மின் வாரிய அதிகாரிகள் கவனித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* வால்பாறை தாலுகாவில், 245 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 2,000 தெருவிளக்குகள் உள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

சேதமடைந்திருந்தால் மாற்றப்படும்!


மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:பெருகும் குடியிருப்புகள், தொழிற்சாலைகளால் உயரழுத்த, குறைவழுத்த மாறுபாடுகளால், சீரான வினியோகம் தடைபடுகிறது. மேலும், மின் கம்பங்களின் அடிப்பகுதியில் குப்பை குவிப்பது, நீர் தேக்கம், வாகனங்கள் மோதுவது, உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால், மின் கம்பங்கள் வலுவிழந்து விடுகிறது.மழை காலத்தில் மின் கம்பங்கள், ஒயர்கள் பழுதாகி விடுகின்றன. இதற்காக, புதிதாக மின் கம்பங்கள் கொள்முதல் செய்து, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
குறிப்பாக, மின்வாரிய பணியாளர்களால் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். பொதுமக்களின் புகார் அடிப்படையிலும் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.ரோடு கிராசிங் பகுதிகளில், 36 மற்றும் 42 அடி உயரத்தில் இரும்பு கம்பங்கள் அமைக்கப்படுகிறது. தாழ்வழுத்த மின்பாதைக்கு, 8 மீட்டர் உயரம்; உயரழுத்த மின்பாதை, 9 மீட்டர் உயரம் கொண்ட சிமென்ட் கம்பங்கள் அமைக்கப்படுகிறது. கடந்த, 2024-25ம் நிதியாண்டில், 360 சேதமடைந்த மின்கம்பங்கள், மாற்றப்பட்டுள்ளன.
வால்பாறையில், மழை காலங்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் உடனடியாக மாற்றப்படுகிறது. வனப்பகுதியில் மின்வாரிய பணியாளர்கள் நேரடியாக சென்று சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்கின்றனர்.இவ்வாறு, கூறினர்.



- நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us