/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இது வேற்று கிரகம் அல்ல; நம்ம கோவை தான்! சேற்றுக்குள் புதையும் வாகனங்கள், பாதசாரிகள் இது வேற்று கிரகம் அல்ல; நம்ம கோவை தான்! சேற்றுக்குள் புதையும் வாகனங்கள், பாதசாரிகள்
இது வேற்று கிரகம் அல்ல; நம்ம கோவை தான்! சேற்றுக்குள் புதையும் வாகனங்கள், பாதசாரிகள்
இது வேற்று கிரகம் அல்ல; நம்ம கோவை தான்! சேற்றுக்குள் புதையும் வாகனங்கள், பாதசாரிகள்
இது வேற்று கிரகம் அல்ல; நம்ம கோவை தான்! சேற்றுக்குள் புதையும் வாகனங்கள், பாதசாரிகள்
ADDED : ஜூலை 03, 2025 10:21 PM

கோவை; கோவை மாநகராட்சி, 22வது வார்டு உதயா நகரில் வீதிகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கோவை மாநகராட்சி, 22வது வார்டு விளாங்குறிச்சி, உதயா நகரில், 350 வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 24 மணி நேர குடிநீர் திட்டம், காஸ் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் பதிப்பதற்காக, இவ்வீதிகளில் உள்ள ரோடுகளை மாநகராட்சி அதிகாரிகள் தோண்டி, குதறிப் போட்டுள்ளனர்.
அவ்வீதிகள் களி மண் பூமியாக இருப்பதால், மழை பெய்யும்போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. உதயா நகர் முழுவதும் ஆங்காங்கே குழிகள் காணப்படுகின்றன.
வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்; சகதியில் சமாளித்து செல்ல முடியாமல் தடுமாறி, கீழே விழுகின்றனர். கார்கள், ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மண் குழிக்குள் புதைகின்றன.
பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியரை அழைத்துச் செல்ல ஏராளமான வாகனங்கள் இப்பகுதிக்கு வருகின்றன. பஸ்கள், வேன்களை இயக்க முடியாமல், டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். ரோடு சரியில்லாவிட்டால் நகருக்குள் பஸ், வேன்களை இயக்க மாட்டோம் என டிரைவர்கள் கூறுவதால், அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் தவிர, வேலைக்குச் செல்லும் பெண்களும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வீட்டுக்குள் திரும்புவதற்கு பாடாய்படுகின்றனர்.
பலரும் கீழே விழுந்து அடிபடுகின்றனர். இது, மாநகராட்சி நிர்வாகத்தின் மீது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இச்சாலைகளை விரைந்து சீரமைத்து தர வேண்டுமென, மாநகராட்சிக்கு உதயா நகர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.