/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உயரழுத்தம், குறைவழுத்தம் நிலவும் பகுதியில் இனி பிரச்னை இருக்காது! புதிதாக 9 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைப்புஉயரழுத்தம், குறைவழுத்தம் நிலவும் பகுதியில் இனி பிரச்னை இருக்காது! புதிதாக 9 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைப்பு
உயரழுத்தம், குறைவழுத்தம் நிலவும் பகுதியில் இனி பிரச்னை இருக்காது! புதிதாக 9 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைப்பு
உயரழுத்தம், குறைவழுத்தம் நிலவும் பகுதியில் இனி பிரச்னை இருக்காது! புதிதாக 9 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைப்பு
உயரழுத்தம், குறைவழுத்தம் நிலவும் பகுதியில் இனி பிரச்னை இருக்காது! புதிதாக 9 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைப்பு
ADDED : மே 30, 2025 11:46 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மின் கோட்டத்தில், கடந்த நிதியாண்டில், குறைவழுத்த மற்றும் உயரழுத்த மின்வினியோக பிரச்னையை சரி செய்ய, சேதமடைந்த 360 மின்கம்பங்கள் மாற்றப்பட்டு, 9 இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொள்ளாச்சி மின்கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன.
ஆனால், பெருகும் குடியிருப்பு வீடுகள், தொழிற்சாலைகளால் உயரழுத்த, குறைவழுத்த மாறுபாடுகளால், சீரான மின்வினியோகம் தடைபடுகிறது. மேலும், மின் கம்பங்களின் கீழ் குப்பையை குவிப்பது, நீர் தேங்குவது, வாகனங்கள் மோதுவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மின் கம்பங்கள் பலமிழந்து வருகிறது.
மழை, மற்றும் பலத்த காற்று வீசுவதாலும், மின் கம்பங்கள், ஒயர்கள் பழுதாகி வருகின்றன. சில மின்கம்பங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் மட்டுமே தாங்கி நிற்கிறது. விபத்து ஏற்படும் சூழலால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
இதனால், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து கீழே சாயும் நிலையில் கம்பங்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, மின்வாரியத்தால் மாற்றப்படுகின்றன.
குறிப்பாக, புதிதாக மின் கம்பங்கள் கொள்முதல் செய்து, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்கப்படுகின்றன. மேலும், குறைந்த மின் அழுத்தம், உயர் மின் அழுத்தம் குறைபாடுகளை தவிர்க்க, புதிய டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்படுகிறது.
அவ்வகையில், 2024-25ம் நிதியாண்டில், சேதமடைந்த 360 மின்கம்பங்கள், மாற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 16 இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் ஆய்வு செய்யப்பட்டு, 9 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்கள் புகாரின் பேரிலும், பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் கண்டறியப்பட்டாலும், அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேபோல, குறைவழுத்த, உயரழுத்த பிரச்னை தவிர்க்க, டிரான்ஸ்பார்மர் புதிதாக நிறுவப்படுகிறது. அதன்படி, கடந்த நிதியாண்டில், சேதமடைந்த உயரழுத்த மின்கம்பங்கள் - 78; தாழ்வழுத்த மின்கம்பங்கள் - 282 எண்ணிக்கையில் மாற்றப்பட்டது.
குறைந்த அழுத்தம் குறைபாடு தொடர்பாக, 9 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, 6 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் குறைபாடு தொடர்பாக, 7 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, 3 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிக்கப்பட்ட மீதமுள்ள இடங்களிலும், புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க தற்போது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மின்கம்பமும், தலா, 5,000 ரூபாய்; டிரான்ஸ்பார்மர், தலா, 7 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.