Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அடுக்குகின்றனர் பல காரணம் அரிசி விலை உயர்வு!காலநிலை மாற்றமே முக்கியம்

அடுக்குகின்றனர் பல காரணம் அரிசி விலை உயர்வு!காலநிலை மாற்றமே முக்கியம்

அடுக்குகின்றனர் பல காரணம் அரிசி விலை உயர்வு!காலநிலை மாற்றமே முக்கியம்

அடுக்குகின்றனர் பல காரணம் அரிசி விலை உயர்வு!காலநிலை மாற்றமே முக்கியம்

UPDATED : பிப் 10, 2024 01:52 AMADDED : பிப் 10, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
கோவை:கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. பொதுவாக, கிலோவுக்கு இரண்டு அல்லது மூன்று ரூபாய் ஏறுவதும், இறங்குவதும் வழக்கமாகும். ஆனால் கடந்த சில வாரங்களில், ஒரு கிலோ அரிசிக்கு 10 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது.

முன்பு மொத்த சந்தையில், எம் -- 45 ரக அரிசி ஒரு கிலோ ரூ.38க்கு விற்கப்பட்டது. இப்போது 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே அரிசி சில்லரை விலையில், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முன்பு மொத்த சந்தையில், ஆர்.என்.ஆர்., பி.பி.டி., ரக அரிசி கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது, 58 ரூபாய்க்கும், சில்லறையில் 65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதே போல், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட ராஜபோகம் ரகம் இப்போது 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.

சமீபத்தில் நெல் விலையும் உயர்ந்துள்ளது. 1,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட 60 கிலோ எடை உள்ள நெல் மூட்டை இப்போது, 1,800 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்கு காரணம்


இந்த விலை உயர்வுக்கு, காலநிலை மாற்றமே காரணம் என்றும், இதனால் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், மகசூல் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக டெல்டா மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாததால் மகசூல் குறைந்து விட்டது.

அறுவடை காலத்தில் பெரும் மழை பெய்ததால், விளைச்சலை பாதுகாக்க முடியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

விவசாய இடுபொருட்களின் விலை, கடுமையாக உயர்ந்து இருப்பதும் அரிசி விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து, கோவை மாவட்ட அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறியதாவது:

பெய்ய வேண்டிய பருவமழை பெய்யவில்லை. பொதுவாக, அக்டோபர் வரை பருவமழை பெய்யும். அதன் பிறகு மழை குறையும். டிசம்பர், ஜனவரி மாதங்கள் நெல் சாகுபடி செய்யும் முக்கியமான மாதங்களாகும்.

அப்போது கனமழை பெய்து, அறுவடையை பாதித்து விட்டது.

உலகம் முழுவதும் அரிசியின் தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான ரகங்கள், ஏற்றுமதிக்கு போய் விடுகின்றன.

போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு உரம் மற்றும் விவசாயத்துக்கு தேவையான பொருட்களின் விலையும், அதிகமாகி உள்ளது. இப்படி பல விஷயங்கள், அரிசி விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us