/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள்தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் இல்லை; வீதிதோறும் குப்பை மூட்டை l இல்லையே குப்பை மேலாண்மை மக்கள்தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் இல்லை; வீதிதோறும் குப்பை மூட்டை l இல்லையே குப்பை மேலாண்மை
மக்கள்தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் இல்லை; வீதிதோறும் குப்பை மூட்டை l இல்லையே குப்பை மேலாண்மை
மக்கள்தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் இல்லை; வீதிதோறும் குப்பை மூட்டை l இல்லையே குப்பை மேலாண்மை
மக்கள்தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் இல்லை; வீதிதோறும் குப்பை மூட்டை l இல்லையே குப்பை மேலாண்மை
ADDED : ஜூன் 25, 2025 11:24 PM

கோவை; கோவை மாநகராட்சியில், 22 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கூடியுள்ள நிலையில், போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால், குப்பை மேலாண்மையில் சுணக்கம் ஏற்படுவதுடன், பணிச்சுமையும் அதிகரித்துள்ளது.
கோவை மாநகராட்சியானது, 257.04 சதுர கி.மீ., பரப்பளவில், 100 வார்டுகளை கொண்டுள்ளது. 2011ல் இதன் எல்லை விஸ்தரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை மேலாண்மை பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது, பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது.
மாநகராட்சியில், 22 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கூடியுள்ளது. ஆனால், குப்பை மேலாண்மையில், 1,999 நிரந்தர பணியாளர்கள், 4,650 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்; தவிர, 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். நிரந்தர பணியாளர்கள் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
குப்பை சேகரிப்பு பணிகளை, ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். வீடு, வீடாக தள்ளுவண்டியுடன் சென்று மக்கும், மக்காத குப்பை என இரண்டாக தரம் பிரித்து வாங்குகின்றனர். ஆனால், ஆட்கள் பற்றாக்குறையால் கூடுதல் பணிச்சுமையுடன், பணி நேரமும் கூடுவதாக புலம்புகின்றனர்.
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
காலை, 6:00 முதல் மதியம், 1:00 மணி வரை எங்களுக்கு பணி நேரம். ஆரம்பத்தில் ஒருவருக்கு, 150 வீடுகள் மட்டுமே குப்பை சேகரிக்க ஒதுக்கப்பட்டது. தற்போது, 250 வீடுகளாக அதிகரித்துள்ளது. மூன்று பேர் பார்க்கும் வேலையை, ஒருவர் பார்க்கிறோம்.
மாநகராட்சி, 44வது வார்டு சாய்பாபா காலனியில், 40 பேர் உள்ளோம்; ஆனால், 80 பேர் தேவை. இப்படி ஒவ்வொரு வார்டிலும், கூடுதலாக ஆட்கள் தேவை. வீடுதோறும் குப்பை சேகரிப்பது மட்டுமின்றி, ரோட்டை சுத்தம் செய்தல், கீழே விழும் மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளையும் செய்கிறோம்.
இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. தள்ளுவண்டிகள் பல மோசமாக இருக்கின்றன. பணிகளை முடிக்க மதியம், 3:00 மணி ஆகிறது. ஆனால், அதற்கேற்ற சம்பளம் கிடையாது. துாய்மை பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே, குப்பை தேக்கம் இல்லாத நகரை உருவாக்க முடியும். தவறினால் வீதிக்கு வீதி சாலையோரங்களில் குப்பை குவிவதை, யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'அரசுக்கு கடிதம் எழுதுவோம்'
துாய்மை பாரதம் இயக்கத்தின், வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்ட, எண்ணிக்கையின் அடிப்படையில்தான் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, 'அனலைஸ்' செய்து, அரசுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
- சிவகுரு பிரபாகரன்
மாநகராட்சி கமிஷனர்