ADDED : ஜன 05, 2024 11:44 PM

வால்பாறை;வால்பாறையில், கடந்த ஆண்டு பெய்த, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள எந்த அணையும் நிரம்பவில்லை.
இதனால், பரம்பிக்குளம் பாசனத்திட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், நேற்று முன்தினம் மாலை முதல் அதிகாலை வரை பெய்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும், நேற்று பகல் முழுவதும் மேக மூட்டம், பனி மூட்டம் சூழ்ந்து வானிலை சில்லென மாறியது.
சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி, கெஜமுடி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்யும் மழையால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 8.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 153 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், அணையிலிருந்து வினாடிக்கு, 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.