Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறுவாணியில் உயர்கிறது நீர் மட்டம்; உபரி நீரை வெளியேற்றலாம் கேரளம்.. இப்பவே சுதாரிக்கணும்!

சிறுவாணியில் உயர்கிறது நீர் மட்டம்; உபரி நீரை வெளியேற்றலாம் கேரளம்.. இப்பவே சுதாரிக்கணும்!

சிறுவாணியில் உயர்கிறது நீர் மட்டம்; உபரி நீரை வெளியேற்றலாம் கேரளம்.. இப்பவே சுதாரிக்கணும்!

சிறுவாணியில் உயர்கிறது நீர் மட்டம்; உபரி நீரை வெளியேற்றலாம் கேரளம்.. இப்பவே சுதாரிக்கணும்!

ADDED : ஜூலை 18, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
கோவை : சிறுவாணியில் பெய்துவரும் தொடர் மழையால், 38.67 அடியாக நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், கேரள அதிகாரிகள் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றாமல் இருக்க, முன்கூட்டியே தீர்வு காண்பது அவசியம்.

கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு, முக்கிய ஆதாரமாக, சிறுவாணி அணை உள்ளது.

தினமும் 10 கோடி லிட்டர்


தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும், இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. இரு மாநில ஒப்பந்தப்படி, கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை, கேரள அரசு தர வேண்டும்.

போதிய மழை இல்லாத சமயத்தில் அதற்கு வாய்ப்பில்லை. கடந்த மே மாதத்தில், 10 அடிக்கும் குறைவாகவும், ஜூன் மாத இறுதியில், 15 அடிக்கும் குறைவாகவும் நீர் மட்டம் இருந்ததால் இடைப்பட்ட காலங்களில், குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களையும் தாண்டியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அணைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம், 35.35 அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 71 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 95 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது.

நீர் மட்டமானது, 38.67 அடியாக அதிகரிக்க, குடிநீர் தேவைக்காக, 7.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. கனமழை தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் அணை நிரம்பவும் வாய்ப்புள்ளது.

கேரளாவின் அடாவடி


ஆனால், பாதுகாப்பு காரணங்களைக்கூறி பருவ மழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க, கேரள அதிகாரிகள் விடுவதில்லை. அணையின் மதகுகளை திறந்து, உபரி நீரை ஆற்றில் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிறுவாணி பராமரிப்பானது கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் வசம் உள்ளது. அணையில் தண்ணீர் எடுக்கும் நீர்புகு கிணற்றில், நான்கு வால்வுகளும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த பிப்., மாதம் ஆழியாற்றில் இருந்து, கேரளாவுக்கு தண்ணீர் வழங்கும் விஷயத்தில் தமிழக அரசை பணியவைக்கும் விதமாக, சிறுவாணியில் தண்ணீர் இருந்தும், 3.7 கோடி லிட்டர் மட்டுமே, தினமும் கோவைக்கு வழங்கினர்.

கடந்தாண்டு பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணையும் கட்டியது. இப்படி நதி நீர் பங்கீட்டில் கேரள அரசு பலவிதங்களில் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்வது தமிழகத்திற்கு குறிப்பாக, கோவைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இச்சூழலில், 'வருமுன் தடுப்போம்' என்பதன் அடிப்படையில், வரும் காலங்களில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றாமல் இருக்க, தமிழக அரசு அதிகாரிகள், கேரள அரசுடன் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கோவை மக்களிடம் எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us