Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சியில் காலம் காலமாக இருந்த நீரோடை மாயம்! குடியிருப்பு பகுதியில் தேங்குது மழைநீர்

பொள்ளாச்சியில் காலம் காலமாக இருந்த நீரோடை மாயம்! குடியிருப்பு பகுதியில் தேங்குது மழைநீர்

பொள்ளாச்சியில் காலம் காலமாக இருந்த நீரோடை மாயம்! குடியிருப்பு பகுதியில் தேங்குது மழைநீர்

பொள்ளாச்சியில் காலம் காலமாக இருந்த நீரோடை மாயம்! குடியிருப்பு பகுதியில் தேங்குது மழைநீர்

ADDED : ஜூலை 02, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டியில் இருந்து, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி வழியாக வால்பாறை ரோடு வரை நீளும் நீர்வழித்தடம் ஆக்கிரமிப்புகளால் மாயமாகி வருகிறது.

நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். நீர் மாசுபாட்டைத் தடுப்பதற்கும், நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கும், நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், காலம் காலமாக உள்ள நீர்வழிப்பாதைகள், ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், முறையாக பராமரிக்கப்படாததாலும், நாளடைவில் மாயமாகி வருகின்றன.

அந்த வரிசையில், மாக்கினாம்பட்டியில் துவங்கி சூளேஸ்வரன்பட்டி வழியாக வால்பாறை ரோடு வரை நீளும் நீர்வழித்தடமும் ஆக்கிரமிப்புகள் காரணமாக மாயமாகி வருகிறது. கடந்த காலங்களில், அரசியல் கட்சியினரின் ஆதரவில் கட்டடங்கள் கட்டப்பட்டும், விளைநிலங்கள் விஸ்தரிப்பு செய்யப்பட்டும், இந்த நீர்வழித்தடம் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், மழையின்போது, வெள்ளம், வழிந்தோட இடமில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தி அதிகரித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு காரணமாக, அதனை துார்வாரி சுத்தப்படுத்தவும், கரைகளை பராமரிக்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இதனிடையே கடந்த ஒரு வாரமாக, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கு செல்லும் பிராதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் வீணாகிறது. இந்த தண்ணீர், நீர்வழித்தடத்தில் பாய்ந்ததால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றது.

இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர், நீர்வழித்தடத்தை சுத்தம் செய்து, தண்ணீரை வெளியேற்றினர். அங்குள்ள காலி மனைப்பிரிவுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவலை தடுக்க 'பிளீச்சிங்' பவுடர் துாவப்பட்டது. எதிர்காலத்தில் நீர் ஆதாரங்களை மீட்க வேண்டியது அவசியம். ஆக்கிரமிப்புகள் காரணமாக, மாயமான இந்த நீர்வழிப்பாதையை மீட்டெடுத்து, மழைநீர் தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலை புறம்போக்கில் பட்டா வழங்கப்பட்டிருந்தால், பட்டாவை ரத்து செய்து, அவர்களுக்கு மாற்றிடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என்றனர்.

வரைபடத்தில் மட்டும் இருக்கு!

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நீர்நிலைகளை பாதுகாப்பதில் சில அதிகாரிகளின் மெத்தனப்போக்கே ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு 2007-ம் ஆண்டு 'தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம்' இயற்றியுள்ளது.இந்த சட்டம், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதன்படி, வருவாய் வரைபடத்தில், நீர்வழிடத்தடம் இடம்பெற்றுள்ளது. எனவே, நீர்வழித்தடத்தின் உண்மையான பரப்பு, தற்போதைய பரப்பு உள்ளிட்ட விபரங்களை, துறை ரீதியான அதிகாரிகள் கண்டறிய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us