Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடையில் கருவிழி பதிவு கருவியால் சிக்கல் நீடிப்பு! நெடுநேரம் காத்திருப்பால் மக்கள் விரக்தி

ரேஷன் கடையில் கருவிழி பதிவு கருவியால் சிக்கல் நீடிப்பு! நெடுநேரம் காத்திருப்பால் மக்கள் விரக்தி

ரேஷன் கடையில் கருவிழி பதிவு கருவியால் சிக்கல் நீடிப்பு! நெடுநேரம் காத்திருப்பால் மக்கள் விரக்தி

ரேஷன் கடையில் கருவிழி பதிவு கருவியால் சிக்கல் நீடிப்பு! நெடுநேரம் காத்திருப்பால் மக்கள் விரக்தி

ADDED : ஜூன் 16, 2025 10:07 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; ரேஷன் கடைகளில் புதிய கருவிழி பதிவு கருவியை பயன்படுத்தி, பொருட்களை விநியோகம் செய்வதால், தாமதம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி, முறைகேடுகளை தடுக்க முயற்சி செய்கிறது.

முதல் கட்டமாக, ரேஷன் கடைகளில் பயனாளிகளின் மொபைல் போன் எண் பதிவு செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வாங்கினால் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி வந்தது.

பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்காத போது, குறுஞ்செய்திகள் வந்தால், அது குறித்து பயனாளிகள் புகார் செய்யலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், முறைகேடுகளை செய்யும் ரேஷன் கடைக்காரர்கள் குறித்து புகார் செய்ய பயனாளிகள் தயக்கம் காட்டினர். இம்முறையால் பெரிய அளவு முறைகேடுகளை தடுக்க முடியவில்லை.

அடுத்து விரல் ரேகை பதிவு செய்தால், மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது.

பெரும்பாலும், வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போது, அவர்களுடைய விரல் ரேகை தேய்ந்து போய் இருப்பதால், விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக் கொள்வதில்லை.

இதனால் பொருட்கள் வழங்குவதில் சிரமமும், காலதாமதமும் ஏற்பட்டது. இதனால், பயனாளிகளுக்கும், ரேஷன் கடைக்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பல நேரங்களில் பயனாளிகள், ரேஷன் பொருட்களை வாங்காமல் வெறும் பையுடன் வீட்டுக்கு செல்லும் அவலமும் நீடித்தது.

இந்த திட்டம், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிக்கலை ஏற்படுத்தியதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிய பி.ஓ.எஸ்., கருவியுடன், கார்டுதாரர்களின் கருவிழி பதிவு கருவியும் இணைக்கப்பட்டது. இதனால் சரியான எடையில் பொருட்களை வழங்குவது உறுதி செய்யப்படும் எனவும், இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவியை பயன்படுத்தி பொருட்களை வழங்குவது துவங்கி உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு, 20 முதல், 30 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்க முடிகிறது.

வரிசையில் காத்திருக்கும் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எளிய முறையிலான தொழில்நுட்பம் அவசியம்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,' ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வயதானவர்களே அதிகம் வருகின்றனர். அவர்கள் கருவிழி பதிவு கருவியில் தங்களுடைய கண்ணை வைத்து பதிவு செய்ய பெரும் சிரமம் ஏற்படுகிறது. கருவிழியை, அக்கருவியின் மையப் பகுதியில் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்க இசைவு தருகிறது. பெரும்பாலான வயதானவர்களால் கருவிழி பதிவு கருவியில், கருவிழியை உற்று நோக்கி பதிவு செய்ய முடிவதில்லை. இதனால் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுகிறது. எளிய முறையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பொது மக்களுக்கு உடனுக்குடன் ரேஷன் பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us