/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பலாத்காரம் செய்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைதுபலாத்காரம் செய்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது
பலாத்காரம் செய்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது
பலாத்காரம் செய்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது
பலாத்காரம் செய்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது
ADDED : பிப் 10, 2024 01:30 AM

கோவை:கோவையில் 2021ம் ஆண்டு பணிபுரிந்த 25 வயது பெண்ணுக்கும், உடற்கல்வி ஆசிரியர் மதுரை மாவட்டம் கே.ஆண்டிப்பட்டியை சேர்ந்த அஜித்குமார், 28, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது; பின், காதலாக மாறியது.
கடந்தாண்டு, பெண் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற அஜித்குமார், தன் பெற்றோர் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி இருப்பதாக கூறி அழைத்து சென்றார்.
ஹோட்டலுக்கு சென்று, ஒரு அறையில் இருவரும் பெற்றோர் வருகைக்கு காத்திருந்தனர். அப்போது அஜித்குமார், பெண்ணுக்கு ஜூஸ் கொடுத்தார்; குடித்ததும் அவர் மயங்கினார். அப்போது அஜித்குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த பெண்ணிடம் அஜித்குமார், 'பெற்றோர் இன்னும் வரவில்லை; மற்றொரு நாள் சந்திக்கலாம்' என்று விடுதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் அஜித்குமார், பெற்றோர் வந்துள்ளதாக கூறி, ஹோட்டலுக்கு அழைத்தார். ஆனால் அவர், உடன் செல்ல மறுத்து விட்டார்.
ஆத்திரம் அடைந்த அஜித்குமார், ஹோட்டலில் அவரை பலாத்காரம் செய்த படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து, சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.
பயந்து போன பெண், மீண்டும் அஜித்குமாருடன் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அஜித்குமார், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார்.
சிறிது நாட்களுக்கு பின், தன் பெற்றோருடன் விடுதிக்கு சென்ற அஜித்குமார், அந்த பெண்ணிடம் பேசி, விரைவில் திருமணம் செய்வதாக நம்ப வைத்தார். பின், அவர்கள் மூவரும், அந்த பெண்ணை அன்னுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.
அஜித்குமாரின் சுயரூபத்தை அறிந்த அந்த பெண், போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதையறிந்த அஜித்குமாரும், பெற்றோரும் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், ஆபாச படங்கள், வீடியோக்களை அழித்து விடுவதாக அஜித்குமார் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நிஜமான பெற்றோர் தானா?
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'அஜித்குமார் பல பெண்கள், மாணவியரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாக தெரிகிறது. பெற்றோர் என கூறி அவருடன் வந்தவர்கள், நிஜமாகவே அவரின் பெற்றோர் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்றார்.