ADDED : மே 21, 2025 11:56 PM

மணி, வால்பாறை: மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வனத்துறை, நகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதுடன், உடனடி அபராதம் விதிக்க வேண்டும். இதன் வாயிலாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கலாம்.
ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்க செயலாளர்:பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் ஒழிப்போம் என்ற கோஷம் மட்டுமே உள்ளது. வேறு எதுவும் நடைபெறவில்லை. உள்ளாட்சி சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மக்கும், மக்காத குப்பை என மக்கள் தரம் பிரித்து கொடுப்பதில்லை. குளிர்பானம், குடிநீர் பாட்டில்களால், சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது; ஓடைகளில் நீரோட்டம் பாதிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த, அவற்றை திரும்ப பெற வேண்டும்.
-வினோத்குமார், தனியார் நிறுவன பணியாளர், பொள்ளாச்சி: சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் எடுத்துச் செல்லும் போது, தன்மை மாறுபடுகிறது. பொதுவெளியில் உணவு பொருட்களுடன் பிளாஸ்டிக் கழிவு வீசப்படுவது அதிகரித்து வருகிறது. கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள், பிளாஸ்டிக் கழிவையும் உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் கால்நடைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.
பெரியசாமி,இந்திய விவசாயிகள் சங்கம், உடுமலை: கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசடைந்தும், ஊரக வளர்ச்சித்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மனிதர்கள் மட்டுமல்லாது, கால்நடைகள் பாதித்தும் கூட, அலட்சியத்தின் உச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர். விளைநிலங்கள், நீராதாரங்கள் என அனைத்து இடங்களிலும், தற்போது நிரம்பியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அலட்சியத்தை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.