/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சியால் மக்களுக்கு பெரும்பாடு!மாநகராட்சியால் மக்களுக்கு பெரும்பாடு!
மாநகராட்சியால் மக்களுக்கு பெரும்பாடு!
மாநகராட்சியால் மக்களுக்கு பெரும்பாடு!
மாநகராட்சியால் மக்களுக்கு பெரும்பாடு!
ADDED : ஜன 29, 2024 12:21 AM

போட்ட ஆறே மாதத்தில் ரோடு கந்தலாகி விடுகிறது. இது போன்ற ஒரு பொறியியல் தொழில் நுட்பத்தை, கோவை மாநகராட்சி அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் எங்கே போய்ப் படித்து வந்தார்கள் என்று தெரியவில்லை.
பாதாள சாக்கடைக்கான மூடியை, நடுரோட்டில் நந்தி போல, குத்து மேடாக அமைத்து, வாகனங்களை வாரி விடுவதும் அல்லது வானத்திலே பறக்க விடுவதும், இவர்களின் கைங்கர்யம் தான்.
மொத்தம் 254 சதுர கி.மீ., பரப்புள்ள கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில் 2732 கி.மீ., துாரமுள்ள ரோட்டை, மாநகராட்சி நிர்வாகம்தான் பராமரிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி ரோடுகளின் நீளமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில், 2100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்பணிகளிலும், ரோடு சார்ந்த பணிகளே அதிகம். ஆனால் கோடிகளைக் கொட்டி, அந்த ரோடுகள் எப்படி சீரமைக்கப்படுகின்றன, எந்த லட்சணத்தில் ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் தான், இந்த படங்கள்.
திடீர் மேடு, திகிலுாட்டும் பள்ளங்கள் என உயிருக்கு உலை வைக்கிற இந்த ரோடுகளில், தினமும் பயணிக்க வேண்டிய மக்களின் வேதனையை, எளிதில் விவரித்துவிட முடியாது.
இந்த ரோடுகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிர் பலி ஏற்படுவது ஒரு புறமிருக்க, தினமும் ஏராளமானமக்கள், கை, கால் உடைந்து முடமாகின்றனர்; முதுகுவலி, தண்டுவடப் பிரச்னை என்று மருத்துவமனைகளில் சேர்கின்றனர்.
வாகனங்கள் பழுதாகி, ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் எந்த அதிகாரியும், கவுன்சிலரும் துளியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ஐந்தாண்டுகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் இல்லாமல் இருந்தது போலத்தான் இப்போதும் இருக்கிறது. பெரும்பாலான கவுன்சிலர்கள், வார்டுகளுக்குள் எட்டிப் பார்ப்பதே இல்லை. இந்த ரோடுகளின் அவலம், சாக்கடை அடைப்பு, குப்பை மலை, குடிநீர் பிரச்னை என எதுவுமே, அவர்களின் கவனத்துக்குப் போவதில்லை. ஆனால், கவுன்சிலருக்கான கமிஷன் மட்டும் சரியாகப் போய் விடுகிறது போலிருக்கிறது.
கோவை மாநகராட்சி ரோடுகளைச் சீரமைக்க, 'புலி வருது' கதையாக, நிதி வந்து கொண்டே இருப்பதாக அமைச்சர்கள், அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான ரோடுகள், மகா மட்டமான நிலையில் தான் இருக்கின்றன. அதனால் வரும் நிதி போகுமிடம்தான் தெரியவில்லை.
தரமற்ற ரோடு வேலைக்கு அபராதம் போடுவதோடு, அனைத்து ரோடுகளைச் சீரமைக்கும் பணியை, சீக்கிரமாகவும் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம்.
வார்டுகளுக்குள் உள்ள ரோடுகளைச் சீரமைக்காமல், ஆளும்கட்சி சார்பில் யார் ஓட்டுக் கேட்டு வந்தாலும்...கட்டாயம் வேட்டுதான்!