Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறி

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறி

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறி

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறி

ADDED : ஜூன் 07, 2025 11:35 PM


Google News
கோவை: கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாதது, மாணவர்களின் கற்றல் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 1,387 பள்ளிகள். இதில், 1,210 அரசு மற்றும் 177 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

ஆனால், சமீபத்தில் தமிழகம் முழுவதும் 8,144 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், ஏற்கனவே காலியாக இருந்த இடங்களில் மேலும் ஆசிரியர் பற்றாக்குறை உருவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 42 இடங்கள்; உயர்நிலைப்பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட, 40 முதல் 45 இடங்கள் வரை காலியாக உள்ளது.

தொடக்கப்பள்ளிகளில், வால்பாறை, கிணத்துக்கடவு, காரமடை, சூலூர் உள்ளிட்ட வட்டாரங்களில் 85க்கும் அதிகமான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 12 பேர், கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில், அந்த துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல பள்ளிகளில் 200க்கும் அதிகமான கூடுதல் தேவை இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு முழுமையான கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கோவை மாவட்ட தலைவர் சரவணகுமார் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப ஆசிரியர்களும் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். பொதுமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு மூலம் காலிப்பணியிடங்கள் இன்னும் நிறப்பபடவில்லை.

பெரும்பாலான பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆனால், இந்த பணியிடங்கள், 'காலிப்பணியிடம்' என காண்பிக்க அரசு மறுக்கிறது.

அதனால், பணிநிரவல் கலந்தாய்வில் சொற்ப எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் பங்கேற்பதால், அந்த இடங்களும் நிரப்பப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கோவை மட்டும் அல்ல, மாநிலம் முழுவதும் இதுதான் நிலைமை. ஆகவே, கூடுதல் பணியிடங்களை அரசு அதிகாரபூர்வமாக, 'காலிப்பணியிடங்கள்' என அறிவிக்க வேண்டும். அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காமல் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us