Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு; ரோந்து தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு; ரோந்து தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு; ரோந்து தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு; ரோந்து தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு

ADDED : மே 12, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். ரோந்துப்பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்தில், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்துவந்த ராக்கியப்பன், 75 - பாக்கியம், 65 தம்பதியரை, வீட்டுக்குள் புகுந்த கும்பல் அடித்து கொலை செய்தது; 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் வசிப்போர் கொலை செய்யப்படுவதும், கொள்ளைகள் நடைபெறுவதும் தொடர்கதையாக உள்ளது.

கொலை எதிரொலியாக குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் இந்த மாவட்டங்களில் தோட்டத்து வீடுகள், தனி வீடு மற்றும் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடு, அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து கண்டறியும் வகையில், கணக்கெடுப்பு பணியை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் 600 வீடுகள் கணக்கெடுப்பு


திருப்பூர் மாநகரில் வீடுகள் விபரங்களை சேகரிக்க ஸ்டேஷனுக்கு, இரு போலீசார் வீதம், 18 பேர் அடங்கிய ஒன்பது குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. குழுவினர் வீடுகள் வாரியாக சென்று அனைத்து விபரங்களையும் பெற்று 'கூகுள் பார்ம்' மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த ஐந்து நாளாக நடந்த கள ஆய்வில், இதுவரை, 600 வீடுகள் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: சேகரிக்கப்படும் விபரங்களைப் பெயரளவில் கிடப்பில் போடாமல் தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளையும், இவற்றையொட்டி உள்ள நீர் வழித்தடங்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணி மட்டுமல்லாமல், விவசாயிகள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும் போது தென்படும் ரோந்து போலீசார், அதன் பின் தென்படுவதில்லை. இதுகுறித்து கேட்டால், பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர் சென்றுள்ளதாகவும், போலீஸ் பற்றாக்குறை உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூருக்கு தேவையான கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல், செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us