Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி - கோவை இரவு நேர ரயிலில் வேகம் தேவை! 46 கி.மீ., பயணிக்க இரண்டு மணி நேரமாகுது

பொள்ளாச்சி - கோவை இரவு நேர ரயிலில் வேகம் தேவை! 46 கி.மீ., பயணிக்க இரண்டு மணி நேரமாகுது

பொள்ளாச்சி - கோவை இரவு நேர ரயிலில் வேகம் தேவை! 46 கி.மீ., பயணிக்க இரண்டு மணி நேரமாகுது

பொள்ளாச்சி - கோவை இரவு நேர ரயிலில் வேகம் தேவை! 46 கி.மீ., பயணிக்க இரண்டு மணி நேரமாகுது

ADDED : டிச 02, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் பயண நேரம் இரண்டு மணி நேரமாவதால், ரயில் வேகத்தை அதிகப்படுத்தி, இரவு 10:15 மணிக்கு கோவையை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன், பாலக்காடு கோட்டத்தில் உள்ளது. தற்போது, மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்குப் பார்வையில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், 90 சதவீத பணிகள் முடிவடைந்து ஸ்டேஷன் பிரம்மிப்பாக மாறி வருகிறது.ஆனால், ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் உள்ளது. தற்போது, பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இச்சூழலில், பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு இரவில் இயக்கப்படும் ரயில் வேகம் குறைவாக இருப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் பாலக்காடு, சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:

பொள்ளாச்சியில் இருந்து மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாலும் நடவடிக்கை இல்லை.

பொள்ளாச்சியில் இருந்து இரவு, 8:50 மணிக்கு கிளம்பி கோவைக்கு, 10:15 மணிக்கு சென்றடைந்தது. இதன் வாயிலாக, சென்னை, பெங்களூரு ரயில்களை பிடிக்க முடிந்தது.

தற்போது, பொள்ளாச்சியில் இருந்து ரயில் புறப்படும் நேரம் மாற்றப்படவில்லை; ஆனால், 46 கி.மீ. துாரம் உள்ள கோவைக்கு ரயிலில் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. கோவைக்கு இரவு, 10:50 மணிக்கு சென்றடைவதால், சென்னை, பெங்களூரு ரயில்களை பிடிக்க முடிவதில்லை.

இதே வழித்தடத்தில், மதியம் கோவை - மதுரைக்கு இயக்கப்படும் ரயில், ஒரு மணி நேரத்துக்குள் பொள்ளாச்சி வருகிறது. அதே வழித்தடத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில், இரண்டு மணி நேரமாவதற்கு காரணம் புரியவில்லை.

கோவைக்கு பஸ் மற்றும் வாகனங்களில் சென்றால் கூட ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடலாம். ஆனால், ரயில் மிக மந்தமாக செல்வதால் பயணியர் அதிருப்தி அடைகின்றனர்.

தற்போது, பொள்ளாச்சி - பெங்களூருக்கு நேரடியாக ரயில் சேவை இல்லை. பொள்ளாச்சி - கோவை இரவு ரயிலில் சென்று, கோவை - பெங்களூரு செல்ல வேண்டும்.

அதனால், ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, ரயில் பயண வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவைக்கு இரவு, 10:15 மணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு, கூறினர்.

இதையும் கொஞ்சம் கவனியுங்க!


பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், 'தினமும் காலை, 10:20மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் மதுரை - கோவை ரயில், கோவைக்கு, 11:20மணிக்கு சென்றடையும் படி வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, 11:50 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலை பிடிக்க பயணியருக்கு வசதியாக இருக்கும். அதே போன்று, பொள்ளாச்சியில் இருந்து இரவு, 8:55 மணிக்கு கோவை புறப்படும் ரயில் வேகத்தை அதிகப்படுத்தினால், திருச்செந்துார் ரயிலில் வரும் பயணியர், கோவை செல்ல வசதியாகவும், பொள்ளாச்சி ரயில் பயணியர், கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ரயில்களில் பயணிக்கவும் உதவியாக இருக்கும்.
கோவை - பெங்களூரு உதய் டபுள் டக்கர் ரயிலை பொள்ளாச்சியில் இருந்தோ அல்லது பொள்ளாச்சி வழியாகவோ இயக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணியர் ரயிலை 'ஆனைமலை ரோடு' ஸ்டேஷனில் நிறுத்தத்துடன், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னைக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us