/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதியில் நிறுத்தப்பட்ட சமூக தணிக்கை பாதியில் நிறுத்தப்பட்ட சமூக தணிக்கை
பாதியில் நிறுத்தப்பட்ட சமூக தணிக்கை
பாதியில் நிறுத்தப்பட்ட சமூக தணிக்கை
பாதியில் நிறுத்தப்பட்ட சமூக தணிக்கை
ADDED : செப் 17, 2025 09:53 PM
அன்னுார்; 'பாதியில் நிறுத்தப்பட்ட சமூக தணிக்கையை மீண்டும் விரைவில் துவக்க வேண்டும்,' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும், குளம், குட்டை சீரமைத்தல், மரக்கன்று நடுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு நிதியாண்டிலும் செய்யப்பட்ட பணிகளை அடுத்த நிதியாண்டில் தணிக்கையாளர்கள் குழு ஆய்வு செய்கிறது. ஆவணங்களை பரிசோதிக்கிறது. களத்தில் அளவீடு செய்கிறது. தணிக்கை அறிக்கை தயாரித்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் சமர்ப்பிக்கிறது.
இதன் வாயிலாக 100 நாள் வேலை திட்டத்தில் விதிமீறல் நடந்திருந்தால் தெரிய வரும். அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் கடந்த ஜூன் வரை 12 ஊராட்சிகளுக்கு சமூக தணிக்கை முடித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அதன் பிறகு திடீரென ஜூலை மாதம் இங்கு பணிபுரிந்த வட்டார வள பயிற்றுனர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் என இரண்டரை மாதம் ஆகியும் மற்ற ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடைபெறவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பணிகள் செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு அளவீடு செய்தால் அளவீடுகள் மாறிவிடும். விதி மீறலை கண்டுபிடிக்க முடியாது. எனவே, விரைவில் வட்டார வள பயிற்றுனர் நியமித்து சமூக தணிக்கை செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என்றனர்.